நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க..

27 March 2011

அம்முகுட்டியும் சேகர் அண்ணாவும்


அம்மா ரொம்ப அலுத்துக்கரா எனக்கு சோன்பப்டி வாங்கிதரத்துக்கு..  தினமும் பைசா தரமுடியாதாம். வீட்டுலையே திங்கறதுக்கு பண்ணி தரேன்னு சொல்றா. ஆனா அவளுக்கு சோன்பப்டி மட்டும் பண்ணிதர  தெரியாதாம். என்ன நினைச்சிட்டு இருக்கா இந்த அம்மா?! எனக்கு புடிச்சத பண்ணி தராம அவ இஷ்டத்துக்கு பண்ணிதரேன்னா நான் எப்படி சாப்பிடறது?!  என்னால நேத்திக்கு சந்தோசமா இருக்க முடியாம போய்ருக்கும், சேகர் அண்ணா மட்டும் இல்லன்னா.. இருங்க.. எப்படின்னு சொல்றேன். சேகர் அண்ணா ரொம்ப நல்லவரு.. உங்களுக்கு கூட அவரை ரொம்ப பிடிக்கும்.. ம்ம் ஆமா..  அவரு காலேஜ்ல படிக்கறாரு. சிகப்பா ஒல்லியா உயரமா இருப்பாரு. அதைவிட முக்கியமான விஷயம் இருக்கு நான் அவரை நல்லவருன்னு சொல்றதுக்கு.. என்ன தெரியுமா?


எப்பவும் போல நேத்திக்கும் சோன்பப்டிகாரன் காலைல மணியடிச்சிட்டே  போனானா.. அப்போ நான் அம்மா கிட்ட ரொம்ப அடம்புடிச்சி அழுதேன் சோன்பப்டி வாங்கி தரசொல்லி. அம்மா வாங்கியே தரமாட்டேன்னு கண்டிப்பா சொல்லிட்டா. கெஞ்சி கேக்கறேன்.. அழறேன்.. கத்தறேன்.. அம்மா ரொம்பவே மோசம்..அமைதியாவே இருக்கா. சோன்பப்டிகாரன் வேற போய்டுவான்... மணி சத்தம் கேட்டுட்டே இருக்கு.. ஐயோ!  அவன் போறானே... தொண்டை வலிக்குது.. இப்போ என்ன பண்றதுன்னு நான் கஷ்டப்படும்போது..  

அப்போ தான், என்னோட கஷ்டத்த பாத்த சேகர் அண்ணா "குட்டி பொண்ணு! என்னைய கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்லு.. தினமும் நான் உனக்கு சோன்பப்டி வாங்கி தரேன்", ன்னு சொன்னதும், அச்சோ! எனக்கு அப்படி ஒரு சந்தோசம்... உடனே சொல்லிட்டேன் "சேகர் அண்ணா! நான் உங்கள தினமும் கல்யாணம் பண்ணிக்கறேன், நீங்களும் எனக்கு  தினமும் சோன்பப்டி வாங்கிதாங்க", ன்னு. உடனே சோன்பப்டி வாங்கி தந்துட்டாரு சிரிச்சிகிட்டே. அம்மா கூட சிரிக்கறா.. இப்போ சொல்லுங்க.. சேகர் அண்ணா எவ்ளோ நல்லவரு?! 

0 கருத்துரைகள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...