என்ன விளையாட்டு இது?
எல்லாம் கலைந்து கிடக்கிறது?
அப்பா திட்டவில்லை யாரையுமே
ஆனால் அம்மா அழுகிறாள்
அப்பாவும் அழுகிறார்
வீடு எங்கே காணோம்?
அப்பாவின் கார்?
அம்மாவின் சமையலறை?
தம்பியின் நாய்க்குட்டி?
என்ன இது!
குறும்பு செய்யும் தம்பியை
முகம் மூடி வைத்திருக்கிறார்கள்
அவனுக்கு மூச்சடைக்குமே!
கவலையாக இருக்கிறது..
எல்லாரையும் அழவைத்தது யார்?!
நேற்று பூமி சுற்றிசுற்றி
ரங்கராட்டினம் போல் சுழன்றது
எனக்கும் கொஞ்சம் பயம்தான்
இருந்தாலும் சந்தோசமும் கொஞ்சம்
தேவதை கதைகளில் படிப்பதுபோல்..
அடடா..
யாரிடமும் சொல்லமுடியவில்லை
அனுபவத்தை பகிரமுடியவில்லை..
என்னுடைய பொம்மைகள்
ஐயையோ! கையை காணோம்!
காலை காணோம்!
தலையை காணோம்!
எத்தனை ஆசையாய் வாங்கினேன்?!
பரவாயில்லை..
அப்பா மீண்டும் வாங்கித்தருவார்
ம்ம்..
பசிக்கிறது
யாரிடம் கேட்பது..?
எல்லாரும் பனி பொம்மை போல்
உறைந்து கிடக்கிறார்கள்
ஆ...!
பொம்மைகளை போலவே
இவர்களும் கிடக்கிறார்களே..
பயமாக இருக்கிறது
ஏன்?
எப்படி?
விளையாட்டில் அடிபட்டதா?
யார் இப்படி தள்ளினார்கள்?
என்னவென்று சொல்வது?
அம்மா!
அணைத்துக்கொண்டு அழுகிறாள்
மீண்டும் மீண்டும்
எல்லாரும் அழுகிறார்கள்
புரியவே இல்லை..
கேட்டால்..
நேற்று நிறையப்பேர்
கடவுளிடம் போய்விட்டார்களாம்
நல்லது தானே!
கடவுள் நல்லவர்
ரொம்பவே நல்லவர்
பத்திரமாக பார்த்துக்கொள்வார்
அப்புறமும் ஏன் அழுகிறார்கள்?
அச்சோ!
பள்ளிக்கு மணியாகி விட்டது..
ஆனால்..
என் நண்பனை காணோமே!
ம்ம்..
அன்பானவன் அவன்
சகுரா மலர்களுடன்
தினம் எனக்காய் வருபவன்
நல்ல விளையாட்டு தோழன்
அழகாய் சிரிப்பான்
பொம்மைகள், மிட்டாய்கள்
பரிசாய் தருபவன்
அப்புறம்
தினமும் ஒரு முத்தம்..
அவனையும் காணோமாம்
"...."
இப்பொழுது
நானும் அழுகிறேன்
என்ன செய்ய?
அவன் எங்கு போனான்?
எப்போது வருவான்?
எனக்கு மிகவும் பிடித்தமானவன்
எவ்வளவு நல்லவன்!
கடவுளிடம் கெஞ்சுகிறேன்..
அவனை மட்டும்
எனக்கு பரிசாய்
திருப்பி தந்துவிடு!
வேறு நண்பர்கள் வேண்டாம்
எனக்கு அவன்தான் வேண்டும்..
நீண்ட அழுகைக்கு பின்
நினைத்துக் கொள்கிறேன்
கடவுள் அன்பு நிறைந்தவர்
அவர் அனுப்பி
என்றாவது அவன் வருவான்..
மீண்டும் மலர்கள் சுமந்து..
எனக்கே எனக்காய்..
விரல்களை விரித்து பார்த்தபடி
காத்துக் கொண்டிருக்கிறேன்.. ©
கவிதை மிகவும் அருமையாக உள்ளது. ஜப்பானிய நில நடுக்கத்தை மையமாக வைத்து மிகவும் நன்றாக எழுதி உள்ளீர்கள். இதே போல பல நல்ல கவிதைகளை எழுதவும்.
ReplyDeleteநன்றி நண்பா! :)
ReplyDeleteநன்றி கார்த்திகேயன்! :)
ReplyDeleteநாம் பால்ய வயதில் இறப்பை பற்றிய புரிதல் இல்லாமல் உலாவிய தருணங்களை
ReplyDeleteகவிதையில் எழுதீடிங்க...
மிகவும் அருமை .... Proud of u :)
நன்றி கோபி!
ReplyDeleteகவிதையை மிக அழகாய் புரிந்துகொண்டமைக்கு மகிழ்ச்சி...