நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க..

30 May 2011

அவள் அழுகையில்


அவள் அழகு
அவள் அழுகையில் 
அழகோ அழகு.. 

அவள்.. 
அழுவதையே விரும்புகிறேன்
சிரிப்பதை விட
அப்போது தானே
மூக்கை துடைப்பாள் 
என் சட்டை பிடித்திழுத்து 

அவள் அழுகையில்
சற்றே நனையும் 
காதோர தலைமுடி   
மயிலிறகு...
மழையில் நனைவதை போல

அழுகையிலும் 
அழகாய் அழ 
எப்படி முடிகிறது
அவளால் மட்டும்?!

அழுதுகொண்டே..
அதற்காய் வெட்கம் கொண்டு
சற்றே சிரிக்க முயன்று
பின் தோற்று 
மெல்ல விசும்புகையில்
ஒரு மிட்டாயை நீட்ட தோன்றுகிறது
அவளின் முன்னே 

சிவந்திருக்கும் கண்களும்
படர்ந்திருக்கும் கண்ணீரும்
பனியின் நடுவே ரோஜாக்களாய்  

திடீர் மழை போலவே
அவளது கண்ணீரும்
அழுது முடிந்த பின்னும்
இமைகளில் ஈரம்  
இலைகளின் நீராய்

28 May 2011

அவளின் பிரிவினிலே

*************************************************


உவமைகளுக்கு உட்பட்டது 
'காதல்'
உவமைகளுக்கு அப்பாற்பட்டது 
'பிரிவின் வலி'
*************************************************

25 May 2011

குடைக்குள் உன்னை இழுக்கையிலேஇரவெல்லாம் விடாமல் மழை
இடைவிடாமல் உன் நினைவுகளும் 
விடிந்தபின்னும் சாலையெங்கும் ஈரம்
அனிச்சையாய் கன்னத்தை துடைக்கிறேன்
******************************************************

மழைநாளின் இரவில் 
மின்சாரம் தடைபட்டாலும்
கண்கள் பறிக்கும் 
மின்னல் வெளிச்சமாய் 
உயிரை பறிக்குது 
அன்பே! உன் நினைவுகள்
அருகில் நீ இல்லாதபொழுதும் 
******************************************************

பள்ளமென்றும் பாராமல் 
வெள்ளமென பாயும் நீராய் 
என் குறைகள் மறைக்கும்  
உன் அன்பு காதல்
******************************************************

நீலமான வானத்தை நோக்கினால் 
அது நீ தானடி!
அதில் 
தினம் ஒரு வடிவெடுக்கும் 
மேகம் நானே தான்
வானத்தை போலவே..
நீயும் மௌனமாய் நோக்கியபடி
என் மாற்றங்களையும் 
உன் ஏமாற்றங்களையும் 
****************************************************** 
  
அன்பே! 
மழை நீர் சுமக்கா
மேகம் இருக்கக்கூடும் 
காதல் நினைவுகள் சுமக்காத இதயம்
ஏதும் இருக்கக்கூடுமா என்ன?!
***************************************************** 

எதிர்ப்படுகையில் 
உதட்டில் விழும் 
ஓர் மழை துளி
எதிர்பாராமல் நீ தரும்
சிறு முத்தமென 
*****************************************************

நனையாதே என்று
குடைக்குள் உன்னை இழுக்கையிலே  
நனைகிறேன் நான் 
உன்னாலே உன்னாலே..
*****************************************************

24 May 2011

பொறுப்பில்லா பையன், பிடிக்கல..
படிக்க தெரியுமா பத்திரிக்கைகளை?
வடிக்க தெரியும் சாதத்தை 
மேடைகளில் பேசியதுண்டா?
கடவுள் முன் பாடியதுண்டு
நண்பர்கள் தோழிகள் என்று...?
அம்மாவும் தங்கையும் மட்டுமே 

பெண் விடுதலை பற்றி?
பெரிய கருத்து எதுவுமில்லை
அரசியல் பற்றிய அலசல்கள்..?
துணி அலச தெரியும் 
கிரிக்கெட் பார்ப்பதுண்டா?
எப்போதும் இல்லை

வலைதளத்தில் பதிவுகள் என்று?
நேரமிருந்தது இல்லை 
கவிதைகள் கட்டுரைகள்..?
கோலம் போடுவேன் நன்றாய்
பங்கு சந்தையில் ஈடுபாடு?
தபால் அலுவலகம் தாண்டியதில்லை 
கிரெடிட் கார்டு?
வரவுக்குள் செலவு செய்வேன்


ஆங்கில படங்கள் பார்த்ததுண்டா?
தமிழில் சில படங்கள் பார்த்ததுண்டு 
பந்தயங்கள் கட்டியதுண்டா?
பார்த்தது கூட இல்லை
பார்ட்டி டான்ஸ் என்று..?
நான்காம் வகுப்பில் பரதநாட்டியம்..
கைபேசி..?
அவரசத்திற்கு மட்டுமே.. 

அலுவலகத்தின் வருமானம்?
அம்மாவிடம் கொடுத்துவிடுவேன் 
வேறு விருப்பங்கள்?
தோட்டம், தியானம், எளியவருக்குதவி  
கோவம் வருமா?
அடிக்கடி கிடையாது
உன் அம்மா, அப்பா..?
தெய்வங்கள்..
என் அம்மா, அப்பா பற்றி?
தெய்வத்தினும் மேலான தெய்வங்கள்

என்னை பற்றி உன் கருத்து?
.......................... (மௌனம்) 
என்னுடைய விருப்பங்கள் ஏதுமில்லை உன்னிடம் 
சரி... பரவாயில்லை 
உனக்கு ஏதாவது கேட்க வேண்டுமா?
எனக்கு தெரிந்தது ஏதாவது உங்களுக்கு..?
.......................... (தெரியாது என்ற மௌனம்)

இனிதே முடிந்தது
பெண் பார்க்கும் படலம்
பையனிடம் அம்மா பதில் கேட்க
"பிடிச்சிருக்கு.. பொறுப்பான பொண்ணு"
பெண்ணிடம் அம்மா கேட்க..
"பொறுப்பில்லா பையன், பிடிக்கல" 

23 May 2011

காணமல் போன அன்று அவன்..


நேற்றுமுதல் காணவில்லை 
சிறு சண்டையினால் தொலைந்துவிட்டான் 

தொலைந்த அவனால்
உறக்கம் தொலைக்கிறேன்
உணவு மறக்கிறேன்
கனவுகளும் வரவில்லை
கவிதைகளும் எழுதவில்லை
தொடுத்த பூக்களாய் 
தொடருது அவன் நினைவுகளே

கண்டுபிடிப்போருக்கு பரிசு உண்டு
ஆனால்..
கேட்டுவிடாதீர்கள் பரிசாய் அவனையே 

அங்க அடையாளங்கள் சொல்கிறேன்
அழகானவன் அவன் 
காணமல் போனது 
நீல நிற சட்டையிலே 

குழந்தை தலைமுடி 
கொஞ்சம் மட்டுமே தலையில் 
அப்பளபூ நெற்றியை 
அடிக்கடி சுருக்குவான்
சிறுபருப்பு கண்கள்
குறுகுறுவென பார்க்கும் 

மிளகாய்பழ மூக்கு
மேலும் சிவக்கும் கோவத்திலே 
அரிந்த மாங்காய் போல் மீசையோ 
குத்தும் முத்தம் குடுக்கையிலே  
கால் படி கழுத்து
திரும்பும் பெண்களை பார்த்ததுமே  

புல் முளைத்த மார்பு
கரடிபொம்மை போலிருக்கும்
கைகால் முளைத்த 
நீண்ட மரம் போல 
நெடுநெடுவென இருப்பான்
வாத்து மிதப்பது நீரில்
இவன் நடப்பது நிலத்தில் 

இன்னும் சொல்லலாம்தான்
ம்ம்..
நீங்களுமே அவனை விரும்பிவிட்டால்?!

அவன்.. 
கணக்கிலே புலி
கவிதையிலே வாலி
எங்கேனும் மறைந்திருந்து
எழுதக்கூடும் ஒரு கவிதை
என்னை திட்டியாவது

தொலைவது போல் நடித்து 
தூரத்தில் ரசித்திருப்பான்
ன்னுடைய தவிப்புகளை..
பொல்லாத காதல்
'போடா' என்று சொல்லிவிடலாம்
ஆனால்..
விளையாட்டு இன்னும் முடியவில்லையே 


20 May 2011

நேற்றைய இரவில் நீ

**********************************************************************************

கதவை மூடியதும் 
முத்தமிட துவங்கின
உன் நினைவுகள்
மௌனமாய் நான் நிற்க 
சப்தமிடுகிறது கதவு 
---------------------------------------------------------------------------


விண்ணை தொட்டு வந்ததினால்
பெருமை கொண்டது மழை
உன்னை தொட்டு போனதினால் 
பொறாமை கொண்டது என் மனம்
-------------------------------------------------------------------------- 


கோலம் போடுகையில்
குனிந்து போடாதே
வெட்கத்தில் சிவக்கிறது பூமி
கோபத்தில் சிவக்கிறேன் நான்
---------------------------------------------------------------------------


தலைக்குளித்த பின்
கூந்தல் துவட்டி  
நீ உதிர்க்கும் நீர்த்துளிகள்
பார்த்து கொண்டிருந்த 
என் முகத்தில் பருக்களாய்
-------------------------------------------------------------------------- 


எதிர் வீட்டு குழந்தைக்கு
நீ கொடுத்த முத்தத்தை
வாங்க முடியவில்லை
எதை கொடுத்தும்
அதனிடம் இருந்து..
---------------------------------------------------------------------------


ஒரு புகைப்படம் கேட்டேன்
முடியாது என்றாள் 
முயற்சியை கைவிட்ட வேளையிலே 
முன் வந்து நிற்கிறாள் 
எடுத்துகொள் என்று 
குழந்தைகளை படமெடுப்பது
அத்தனை சுலபமில்லை..
---------------------------------------------------------------------------

யார் தொலைத்த கவிதை அவள்?


பாட ஒரு மொழியில்லையே 
பாவி மக பூஞ்ச்சிரிப்ப
பாக்க ஒரு நாள் போதலையே
பாதகத்தி கொடுத்து வைக்கலையே
அடியே! உன்ன கொல்லனுமே
அப்பனவன் பாக்கும்முன்னே  

விடி வெள்ளி வேணுமின்னு 
வேண்டி நான் நிக்கையிலே
வேண்டாம வந்துத்தித்த
பெண்ணிலவே.. வெண்ணிலவே.. 

அம்மான்னு நீ அழைக்குமுன்னே
மண்ணள்ளி போட்டிடவா
இல்ல நெல்லள்ளி  போட்டிடவா
நோகாம கொல்லனுமேன்னு
என் நெஞ்சுக்குழி நோகுதடி

பிச்சைக்காரன் வந்து நின்னா
பிடி சோறு போட்டிடுவேன்
பொண்ணா நீ பொறந்ததினால்
பாலாட பாலும் இல்லையடி 

ஏடு எடுத்து படிச்சிருந்தா 
ஏன்னு ஒரு வார்த்த கேட்டிருப்பேன் 
ஐஞ்சு காசு சேர்த்திருந்தா 
அஞ்சுகத்த கொஞ்சியிருப்பேன்
வக்கத்த பொம்பளைக்கு 
உன்ன வாழவைக்க வழியில்லையே 


தங்க வில ஏறுதடி 
தங்கமே நீ பொறந்த வேளபாத்து
ஏட்டுகல்வி கூட
எட்டாத விலையிலடி
கட்டிக்க வரவனோ..
கட்டாயம் கேப்பான் வரதட்சன 

யார் செய்ஞ்ச தப்பு இது?
ஆண் பெண்ணை ஏசரானே
பொண்ணா நீ பொறக்க 
அவனல்லோ காரணமே..

கூட பொறந்தவளும் 
கூடி படுத்தவளும்
அவன பெத்தவளும் 
அவன் கும்பிடுந் தெய்வமுமே 
பொம்பளைக  தானே?!
புறந்தள்ளி போறானே 
அவன் பெத்த உன்னமட்டும்..  

என் அப்பனை பேசறதா?
உன் அப்பனை ஏசறதா?
இல்ல..  
சமூகத்த தான் சாடறதா?
சாகாம உன்ன காக்க
ஒத்த வழி எனக்கில்லையே  

பொறந்து வளந்து
பொண்ணா நீ பொழைக்கறத்துக்கு
போதுமடி நீ வாழ்ந்த 
இந்த ஒரு நிமிசம்.. 

இங்குமங்கும் அலபாஞ்சி 
என்ன போல நீ தொலைக்க
பொண்ணு ஒண்ணு பெத்து 
பெருஞ்ச்சோகத்துல அழுவத விட 

தேடி வந்த தேவதைய
தெய்வத்திடமே அனுப்பிடறேன் 

18 May 2011

யார் மலை உச்சியை தொடுவது?!


ஒரு பெரிய மலையின் கீழ் நிறைய தவளைகள் நின்று கொண்டு கத்திக்கொண்டு இருந்தன. 

யார் மலை உச்சியை தொடுவது என்று போட்டாபோட்டி நடந்து கொண்டு இருந்தது. 

அனைத்து தவளைகளும் மலை உச்சியை தொடுவது இயலவே இயலாத காரியம் என்று கத்திக்கொண்டு மட்டும் இருக்கும் வேளையில் ஒரு தவளை மட்டும் மலை உச்சியை தொட்டேவிட்டது. 

எப்படி? 

அதற்கு காது கேட்காது. 

எதிர்மறையான வார்த்தைகளை எப்போதும் காதில் வாங்காதீர்கள் நண்பர்களே.. 

சாதனைகள் தொடர வாழ்த்துக்கள்! 


தண்டச்சோறு


ஒரு வாய் சோறூட்ட 
நிலா காட்டினாள் அம்மா
இன்று.. 
ஒரு வேளை சோறு கிடைக்க
காட்டவேண்டும் நான் 
என் மதிப்பெண் பட்டியலை 
பங்கு சந்தையில் மட்டுமே 
ஏற்ற இறக்கங்கள் அனுமதி
மதிப்பெண் பட்டியலில் இல்லை 
பெற்றபோது கொண்ட பெருமையெல்லாம்
பெறாத மதிப்பெண்களுக்காய்  தொலைகிறது

தோற்று போன என்னுடைய 
ஒரு சில பரிட்சைகளுக்காய்
தாவணியை பெற்றிருக்கலாம் 
அம்மாவின் புலம்பல்
பெற்றதே வீண் 
அப்பாவின் ஆத்திரம்
ஏன் படிப்பு ஏறவில்லை..?
என்னுடைய ஆதங்கம்
அழுது விட துடித்தாலும்
ஆண்மை தடுக்கிறது 

நண்பர்களெல்லாம் நல்லவரில்லை 
புத்தகம் மட்டுமே உற்றதோழன் 
புது புது மொழிகளாய் 
உதிர்த்து போகிறார்கள் 
சுற்றமும் சொந்தமும் 
புத்தகங்கள் எல்லாம்
புதிதாகவே இருக்கின்றன  
யாரும் படிக்காத 
என் மனது போலவே

எதை கேட்டாலும் 
பணமில்லை என்கிறார் 
மனமில்லாத அப்பா
ஒரு வேளை.. 
மதிப்பெண்கள் என்பதும் தொண்ணூறும் 
நூறு ரூபாய்களாய் மாறிடுமோ?!
எதையும் கேட்கவே விருப்பமில்லை 
மனமுடைந்த அம்மா 

வயது காலத்தில் 
பிள்ளைகள் பாரம் பெற்றவர்களுக்கு
வயதான காலத்தில்
பெற்றவர்கள் பாரம் பிள்ளைகளுக்கு
என்னைப்போல் எத்தனை பேரோ
இளம்நெஞ்சில் பாரம் சுமந்தபடி.. 
புரிதல் இல்லா பெற்றோர்களால் 

களவும் கற்று மற
மறந்தது பல என்றாலும்
மறக்காதது ஒன்று தான்
பெற்றவர்களின் அன்பை 
நிகழ்காலத்தை தொலைக்கிறார்கள்
என் எதிர்காலத்திற்காய்
நிஜம் சுடுகிறது
நிச்சயமாய் ஜெயிப்பேன்
நினைத்த மாதிரி இல்லாவிட்டாலும்
நினைத்தே பார்க்காத அளவுக்கு..


17 May 2011

காகித முத்தங்கள்


உனது தேவையாய் நானும்
எனது தேவையாய் நீயும் 
எப்போதுமே இருக்கிறோம்
நமது தேவைகளின் பட்டியலில் 
இறுதியில் இருக்கும் வரி(லி)யில் 

உன் முகம் தொலைத்தப்பின் 
முகவரி சொல்ல ஒரு வீடு
நமக்கே நமக்காய்
முற்றத்தில் இருக்கும் 
தனி ஒரு ஓவியமாய் நான் 

எப்போதும் இணைந்திருப்போம்
திருமண உறுதிமொழியால் 
இணையத்திலாவது இணைந்திருக்கிறோம்
தினம் ஒரு மணி நேரம்
உறக்கம் தொலைத்தாவது 

உன் முத்தங்களை 
சுமந்தது வரும் காகிதங்கள் 
என் முத்தங்களில் நனையவில்லை 
கண்ணீரில் கவிழ்ந்து போகின்றன 
காகித கப்பல்களாய் 

உன் விடியல் நேரம் வேறு 
என் விடியல் நேரம் வேறு 
என்றாலும்.. 
இரவின் வேதனைகள்
இருவருக்கும் ஒன்று போலவே 

தும்மலும் இருமலும் 
தூரத்திலிருக்கும் உன் நினைவால்  
துணி துவைக்கையிலும்
உன் நினைவுகள் 
என்னை துவைத்தபடி

நம் உரையாடல்களில்
மௌனமாய் சில நிமிடங்கள்
அங்கு உன் கவலைக்காகவும் 
இங்கு என் கண்ணீருக்காகவும்  
உணர்ந்துருகும் தொலைபேசி

இருபதில் செய்த திருமணம் 
பிரித்து வைத்தது நம்மை 
அறுபதில் செய்யும் திருமணமாவது
பிரியாமல் வைத்திருக்குமா நம்மை? 
அலாதியான கற்பனைகள்.. 

உறையும் பனியின் பின்னணியில்
நானில்லா உன் புகைப்படங்களை 
எனக்காய் அனுப்பி வைக்கிறாய்
எரிக்கும் வெயிலில் 
புகைந்து போகிறேன் நான் 

கடல்கடந்து சென்று நீ 
பணம் சேர்ப்பது போல்
கண்ணீர் கடந்து சென்று 
காதலை சேர்த்து வைக்கிறேன்
வயோதிகத்தின் எல்லையிலாவது சந்திப்போம்   

சில கவிதைகள் மட்டும்
முடிவதே இல்லை


11 May 2011

உன்னைவிட்டு போகமாட்டேன்


விட்டுவிட்டு வந்துவிட்டேன்
அம்மா வீட்டில் அவளை 
வீதியை கொண்டு வந்து 
வீட்டில் வைத்தது போல
கலைந்துக்கிடக்கிறது எல்லாம்
அவளில்லாத வீடு 
அமைதியை நிரப்பிக்கொண்டு
அழகை தொலைத்தபடி 

அவளாக சென்றிருந்தால்
அரைத்து வைத்த மாவும்
ஐந்தாறு பழங்களும்
அதன் நடுவே புளிக்காய்ச்சலும் 
பொங்கிய சாதம் சிறிதுமாய்   
நிரம்பியிருக்கும் குளிர்சாதனப்பெட்டி 
ஏதுமற்று கிடக்கிறது என் வயிறு..

பொங்கலன்று காய்ச்சுவதாய்
பொங்கவிட்டிருந்தேன் பாலை
வேற்றுகிரகமாய் சமையலறை   
வெந்தபுண்ணில் ஈட்டியாய் வேலைக்காரி
வித்தியாசமாய் பார்க்கிறாள் 
என் முயற்சிகளை...
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாய்
அறிவித்துவிட்டாள் காபி வேண்டாமென்று

தனியே பேசி பழக்கமில்லை
எனக்கு நானே அந்நியமாய்
யாருமற்ற வேளையிலே 
என்ன செய்துக்கொண்டிருந்திருப்பாள்? 
இத்தனை நாளாய் கேட்டதில்லை!
என்ன செய்வதென்றும் புரியவில்லை
தொலைக்காட்சியும் பத்திரிக்கையும் 
தொடர்ந்து ஆதரவு தரவில்லை
தட்டிமுட்டி எழுத முயன்றால்
தூக்கம் வர துவங்கிவிட்டது

கண்ணைமூடி படுத்தால்
கனவுக்கன்னிகள் வரவில்லை
கண்ணீர் நிறைந்த அவளின் முகமே..
நானில்லா இந்த இரவில்
என்னை நினைத்துக்கொண்டிருப்பாளா? 
இல்லை நான் அடித்ததையா?
இசையாலும் ஈடுகட்ட முடியவில்லை 
தொடர்ந்து அவள் பேசும் அழகை
வெறுமை நிரம்பிய படுக்கையும்
வேதனையாய் புலம்பியபடி

அம்மாவீட்டில் இருக்ககூடும்
சிரித்தபடி அவள்
அவள் வீட்டில் நான் 
சிரிப்பை தொலைத்தபடி..
என்னை சார்ந்து அவளில்லை
அவளை சார்ந்தே நான்
போதுமடி வேதனைகள்
பள்ளிமுடித்து ஓடிவரும் பிள்ளையாய்
வந்துவிடுகிறேன் உன்னிடமே..
முந்தானை கொண்டு 
துடைத்துவிடு என் வெறுமைகளை

விடியலுக்கு முன்வரும் பேப்பர்காரனாய்
நிற்கிறேன் அவளின் முன்
விளக்கங்கள் ஏதும் தர
விடவில்லை அவள் என்னை
அன்னையிடமும் சொல்லவில்லை
எங்களின் சண்டை பற்றி
ஏதுமறியாமல் எல்லாரும் என்னை புகழ..
பெருந்தன்மையாய் அவள்
பேதையாய் நான்

வீடுவரும் வழியினிலே
மன்னிப்பு வேண்டி 
அவள் விழி நோக்க
அவளோ என் மடியில் 
அழுதபடி சொல்கிறாள்
"உன்னைவிட்டு போகமாட்டேன்"
சொல்வதற்கு ஏதுமில்லை என்னிடம்
இறுக்கமாய் அணைப்பதை தவிர...10 May 2011

பொம்மை விளையாட்டு


பொம்மையை சற்று நேரமே 
விளையாட கொடுக்கும் 
சிறு பிள்ளை போலவே
அவள் இதயத்தை 
கொடுத்து விட்டு 
உடனே எடுத்து கொள்கிறாள் 
ஒவ்வொரு சண்டையிலும் 
  
அழுதோ இல்லை சண்டையிட்டோ
என்னிடமே வைத்துக்கொள்ள 
முயன்றதில்லை எந்நாளும்  
ஆனாலும்.. 
அவளது விளையாட்டு தோழன் 
நான் மட்டுமே எப்போதும்.. 


07 May 2011

அவளின் உலகம்
அவளுக்கென்று ஒரு கவிதை
அன்னையர் தினத்துக்காய் எழுதி
பெருமை பொங்க நீட்டியபோது
மென்மையாய் சிரித்தபடி சொல்கிறாள்
எந்த ஒரு கவிதையும் 
அவ்வளவு அழகில்லை
முதல் முதலாய் நீ
'அம்மா' என்று அழைத்ததை விட.. 
எழுத்துக்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட 
கவிதை அவள்


"உனக்கு எதுவும் புரியாது.."
நான் முறைத்த வேளையிலும்
என்னை முழுதாய் புரிந்தவள்..


பெரும்பாலான என் தவறுகள்
தவிர்க்க படுகின்றன..
இன்னமும் என்னை குழந்தையாகவே
நினைத்துக்கொண்டிருக்கும் அவளால்.. 


நான் கைவிட்டாலும்
எனக்காய் கண்ணீர் விடுபவள்உலகம் முழுதும் நான் சுற்றினாலும்
அவளின் உலகம் நான் மட்டுமே


அவள் புன்னகைக்க
ஓராயிரம் பரிசுகள் வேண்டாம்
நான் மட்டுமே போதும்.. 


Related Posts Plugin for WordPress, Blogger...