நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க..

07 December 2011

நம்பிக்கைகள் துளிர்க்கின்றன

நடும் விதைகளெல்லாம் 
மரமாவது இல்லை
பல நேரங்களில் 

ஆனால்...
விழும் விதைகள் கூட
முளைத்து விடுகின்றன
சில நேரங்களில்

நடுவது 
நம் செயல் என்றாலும் 
பின் எழுவது 
விதைகளின் விடாமுயற்சியே 

மனித மனதிலே
வேதனைகள் விருட்சமாகின்றன 
பல நேரங்களில் 
நம்பிக்கைகள் துளிர்க்கின்றன
சில நேரங்களில்

நடப்பதும் அதை முடிப்பதும் 
நம் கையில் இல்லை 
என்றாலும்... 

வேதனைகளை உடைத்து
சாதனைகளை படைப்பது
விடா முயற்சிகளும்
விழா நம்பிக்கைகளுமே..! 

06 December 2011

ஒரு கவிதை சொல்ல வேண்டாம்

இன்றாவது நீ பேசுவாயா?
இல்லை..
எப்போதும் போலவே
தென்னை மரக்கீற்றாய்
தலைமுடி அசைய நிற்பாயா?
வார்த்தைகளை தொலைத்து விட்டாய்
என்ன செய்யட்டும் உன்னை?
தண்டனையாய்...! 
புல்வெளியில் தள்ளிவிடட்டுமா?
மலர்களால் அடிக்கட்டுமா?
இல்லை..
மழலையாய் முதுகிலேறி குதிக்கட்டுமா?
சொல்..
இப்பொழுதே பேசி விடு
மழை வரப்போகிறது
நனைந்தபடி நீ பேசினால் 
தவளைக்கும் தொண்டை கட்டிவிடும்
யார் தடுக்கிறார்கள் உன் வார்த்தைகளை?
இந்த குட்டிப்பூனை மீசையா?
முறைக்காதே!
சுமைதாங்கி பார்த்திருக்கிறேன்
மௌனம் தாங்கியை 
இப்பொழுதுதான் பார்க்கிறேன்
கோவப்பட்டாவது பேசேன்!
வார்த்தை சப்தங்களுக்கு பதிலாய் 
முத்தசப்தங்கள் தர முயற்சிக்கிறாய் 
என்ன இது? ம்ம்.. 
ஒரு கவிதை சொல்ல வேண்டாம்
என்னை காதலிப்பதாய் சொல்
இனி நான் மௌனமாகிவிடுவேன்!01 December 2011

உன் பெயர்தான் அதற்கும்


சண்டைகளின் பொழுது  
வார்த்தைகளை தேடுகிறாய்
சாமாதானங்களின் பொழுது 
ரோஜாவை தேடுகிறாய்
எப்பொழுது தான்
என் மனதை தேடுவாய்?

காதலிக்கும் பொழுது
கணக்கில்லாமல் கொடுத்தாய் 
சண்டைகள் போடாமலிருக்க 
கல்யாணத்திற்கு பின்னரோ
கடமைக்கு கொடுக்கிறாய் 
சண்டைகள் முடிந்த பிறகு

சிறு குழந்தையெனவே அழுகிறேன்
நம் சண்டைகளின் நடுவில்
நடிப்பென சொல்கிறாய்
நான் நடிகை இல்லை
உன் காதலி 

நம் ஒவ்வொரு சண்டைகளையும்
உடனே மறந்து விடுகிறாய்
நாம் காதலித்த கணங்களை
மறந்ததை போலவே 

எப்போதும் என்னுடன் இருக்கிறது
நீ கொடுத்த கரடிபொம்மை ஒன்று
அதனுடனும் நான் சண்டைபோடுகிறேன்
சண்டைகள் முடிந்த பின் 
அதுமட்டும் மன்னிப்பு கேட்காது 
உன் பெயர்தான் அதற்கும் 
Related Posts Plugin for WordPress, Blogger...