நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க..

11 May 2011

உன்னைவிட்டு போகமாட்டேன்


விட்டுவிட்டு வந்துவிட்டேன்
அம்மா வீட்டில் அவளை 
வீதியை கொண்டு வந்து 
வீட்டில் வைத்தது போல
கலைந்துக்கிடக்கிறது எல்லாம்
அவளில்லாத வீடு 
அமைதியை நிரப்பிக்கொண்டு
அழகை தொலைத்தபடி 

அவளாக சென்றிருந்தால்
அரைத்து வைத்த மாவும்
ஐந்தாறு பழங்களும்
அதன் நடுவே புளிக்காய்ச்சலும் 
பொங்கிய சாதம் சிறிதுமாய்   
நிரம்பியிருக்கும் குளிர்சாதனப்பெட்டி 
ஏதுமற்று கிடக்கிறது என் வயிறு..

பொங்கலன்று காய்ச்சுவதாய்
பொங்கவிட்டிருந்தேன் பாலை
வேற்றுகிரகமாய் சமையலறை   
வெந்தபுண்ணில் ஈட்டியாய் வேலைக்காரி
வித்தியாசமாய் பார்க்கிறாள் 
என் முயற்சிகளை...
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாய்
அறிவித்துவிட்டாள் காபி வேண்டாமென்று

தனியே பேசி பழக்கமில்லை
எனக்கு நானே அந்நியமாய்
யாருமற்ற வேளையிலே 
என்ன செய்துக்கொண்டிருந்திருப்பாள்? 
இத்தனை நாளாய் கேட்டதில்லை!
என்ன செய்வதென்றும் புரியவில்லை
தொலைக்காட்சியும் பத்திரிக்கையும் 
தொடர்ந்து ஆதரவு தரவில்லை
தட்டிமுட்டி எழுத முயன்றால்
தூக்கம் வர துவங்கிவிட்டது

கண்ணைமூடி படுத்தால்
கனவுக்கன்னிகள் வரவில்லை
கண்ணீர் நிறைந்த அவளின் முகமே..
நானில்லா இந்த இரவில்
என்னை நினைத்துக்கொண்டிருப்பாளா? 
இல்லை நான் அடித்ததையா?
இசையாலும் ஈடுகட்ட முடியவில்லை 
தொடர்ந்து அவள் பேசும் அழகை
வெறுமை நிரம்பிய படுக்கையும்
வேதனையாய் புலம்பியபடி

அம்மாவீட்டில் இருக்ககூடும்
சிரித்தபடி அவள்
அவள் வீட்டில் நான் 
சிரிப்பை தொலைத்தபடி..
என்னை சார்ந்து அவளில்லை
அவளை சார்ந்தே நான்
போதுமடி வேதனைகள்
பள்ளிமுடித்து ஓடிவரும் பிள்ளையாய்
வந்துவிடுகிறேன் உன்னிடமே..
முந்தானை கொண்டு 
துடைத்துவிடு என் வெறுமைகளை

விடியலுக்கு முன்வரும் பேப்பர்காரனாய்
நிற்கிறேன் அவளின் முன்
விளக்கங்கள் ஏதும் தர
விடவில்லை அவள் என்னை
அன்னையிடமும் சொல்லவில்லை
எங்களின் சண்டை பற்றி
ஏதுமறியாமல் எல்லாரும் என்னை புகழ..
பெருந்தன்மையாய் அவள்
பேதையாய் நான்

வீடுவரும் வழியினிலே
மன்னிப்பு வேண்டி 
அவள் விழி நோக்க
அவளோ என் மடியில் 
அழுதபடி சொல்கிறாள்
"உன்னைவிட்டு போகமாட்டேன்"
சொல்வதற்கு ஏதுமில்லை என்னிடம்
இறுக்கமாய் அணைப்பதை தவிர...15 comments:

 1. //அவளோ என் மடியில்
  அழுதபடி சொல்கிறாள்
  "உன்னைவிட்டு போகமாட்டேன்"
  சொல்வதற்கு ஏதுமில்லை என்னிடம்
  இறுக்கமாய் அணைப்பதை தவிர...///


  அடடடடடா அருமை அருமை.....

  ReplyDelete
 2. கொடுமை கொடுமை தனிமை கொடுமை.. அதனினும் கொடுமை அம்மாவை விட்டு தனிமையில் இருப்பது

  ReplyDelete
 3. //அவளில்லாத வீடு
  அமைதியை நிரப்பிக்கொண்டு
  அழகை தொலைத்தபடி//
  அசத்தல் வரிகள். அருமையா சொல்லிருக்கீங்க.

  ReplyDelete
 4. இந்த கவிதை விட்டு செல்வதற்கு மனமில்லை...
  அருமையான கவிதை..
  வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 5. திரட்டிகளில் இணைப்புக் கொடுங்கள் அதிக வாசகர்கள் கிடைப்பார்கள்...

  ReplyDelete
 6. அருமை அருமை
  வீதியைக் கொண்டுவந்து
  வீட்டுக்குள் வைத்தது போல்...
  வித்தியாசமான சிந்தனை
  வீட்டின் அலங்கோலத்தை
  இதைவிட நேர்த்தியாய் சொல்லவே முடியாது
  நல்ல பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. படிக்க படிக்க ஆசையாய் இருக்கிறது
  இதைப் படித்தால் பிரிந்திருக்கும் உறவுகளும் ஒன்று சேர்ந்துவிடும்

  ReplyDelete
 8. வீதியைக் கொண்டுவந்து வீட்டில் வைத்ததைப்போல
  அலங்கோலமாய் கிடக்கும் வீட்டை
  இதைவிட அழகாய் யாரும் சொல்ல முடியுமா ?
  மனங்கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. அம்மாவீட்டில் இருக்ககூடும்
  சிரித்தபடி அவள்
  அவள் வீட்டில் நான்
  சிரிப்பை தொலைத்தபடி..
  என்னை சார்ந்து அவளில்லை
  அவளை சார்ந்தே நான்
  போதுமடி வேதனைகள்
  பள்ளிமுடித்து ஓடிவரும் பிள்ளையாய்
  வந்துவிடுகிறேன் உன்னிடமே..
  முந்தானை கொண்டு
  துடைத்துவிடு என் வெறுமைகளை
  படித்ததில் பிடித்தது அருமை
  வாழ்த்துகள்........

  ReplyDelete
 10. அருமையான கவிதை. வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

  ReplyDelete
 11. தங்களின் இந்த பதிவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.கீழ் வரும் முகவரியில் வந்து பார்க்கவும்.

  http://blogintamil.blogspot.com/2011/10/9102011.html

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...