ரோஜாபூவை அவர் நீட்டிய தினம்
அடடா!
என்றும் மறக்காது
இதோ.. ஒருமுழம் மல்லிகைக்காய்
மன்றாடியபடி நிற்கிறேன்..
இன்றைக்கு தேவை இல்லையாம்..!!!
கடலை பார்த்து கவிதை சொல்லி
சுண்டல் தின்று.. சுகமாய் மடி சாய்ந்து
கால் நனைத்த ஈரம் காய்ந்துவிட்டது
இப்போதெல்லாம் கடற்கரை பார்ப்பது
செய்திதாள்களில் மட்டுமே..
ஊர் சுற்றிய காலங்களில்
உணவு விடுதிகளில்..
நான் விரும்பிய உணவை
அவரும் சாப்பிட..
இந்நாளின் சமையல்களில்
அவர் விரும்பும் உணவுகள் மட்டுமே..
என்றாலும்.. நான் சாப்பிட்டேனா
என்ற கேள்வி கேட்கப்பட்டதே இல்லை..
வயிற்று வலியோடு துடிக்கையில்
கல்லூரி விடுதிக்கு வந்து பார்த்து
வெந்தயத்தை நீட்டிவிட்டு சென்றார்..
மூன்று நாளின் முதல் நாளில்
அணைக்கமுயன்று வில(ள)க்கபட்டபின்..
வெடிக்கிறது கோவம் அவர் முகத்தில்..
இன்றைய நாள் இனிதாக இல்லை..
அன்றெல்லாம்..
ஆசையாய் பேசி முகம் நோக்கி
காதலை மட்டுமே உணரசெய்த விழிகள்..
கனலை கக்குகின்றன இன்று
வரவுசெலவு கணக்குகள் சொல்லும் போது
கூடுதலான செலவுகளுக்கு பதிலாய்
குடும்பசங்கத்தின் அப்பாவி உறுப்பினராய் நான்..
"உனக்கு பிடித்த பாடல்களை கேட்க.."
கண்முன்னே நீட்டினார்
பிறந்தநாள் பரிசாய் சிறிய வானொலியை
கடவுளுக்கு நன்றி சொன்னேன்..
என் ரசனைகளை ரசிக்கும் அவருக்காய்
காலங்கள் கடந்த வேளையில்
மறந்தே போனார் என் பிறந்தநாளை
கடவுளுக்கு என்ன சொல்லட்டும் இப்போது?!
பேருந்து பயணங்களில்
ஒரு முத்தமிட அவர் அனுமதி கேட்டதும்
தயங்கியபடி இட்ட திருட்டு முத்தமும்..
இன்றும் தித்தித்தபடி
அனுமதியும் விருப்பங்களும் தொலைத்த முத்தங்களே
தொடருகின்றன இப்பொழுதெல்லாம்
வேலை முடித்து வியர்வையுடன்
ஆயாசமாய் அருகில் அமர்கையில்
அன்பு மறந்து அருவருக்கிறார்
புகையும் மதுவுமாய்
போதையில் அவர் அணைத்த வேளையில்
எதை நான் மறந்திருக்க வேண்டும்?!
நிறைய எழுதலாம் தான்..
காதல் நாட்களை பற்றியும்
கல்யாணத்திற்கு பின்வந்த நாட்களை பற்றியும்
இருந்தாலும்..
அவர் வரும் நேரமாயிற்றே என்ற பதட்டத்தில்
நிறுத்தி வைக்கிறேன் என் எழுத்துக்களை
நீண்ட பெருமூச்சின் நடுவே தோன்றுகிறது
அவரா இவர்?!
இருக்காது.. இருக்கவே இருக்காது!!!
அருமையான கவிதை சகோ...
ReplyDeleteஅசத்தலாக கவிதை....
ReplyDeleteவாழ்த்துக்கள்.. நண்பா
கி.மு கிபி என்பது மாதிரி
ReplyDeleteகல்யாணத்திற்கு முன்
கல்யாணத்திற்குப் பின் என
உறவுகள் தலைகீழாகத்தான்
மாறிப்போகின்றன
அதை மிக அழகாக சொல்லிப் போகிறது
உங்கள் பதிவு
அசத்தல் பதிவு தொடர வாழ்த்துக்கள்
காதலன்-காதலி உறவுமுறை கணவன்-மனைவியாக பரிணமிக்கும் பொழுதில்,
ReplyDeleteகணவனுக்குரிய ஆணவமும், அலட்சியமும் இயல்பாகவே ஆணுக்கு வந்துவிடுவதாகவே தோன்றுகிறது. சில ஆத்மாக்கள் இதில் சந்தோஷ விதிவிலக்கு. பூக்களை ரசிக்கும் மனோபாவத்தையும், மழையில் நனையும் குதூகலத்தையும் ரசிக்கும் தன்மையை பெரும்பாலானோர் இழந்தே விடுகின்றனர். கவிதை மிக நாசூக்காய் அத்தனையையும் பதிவு செய்திருக்கிறது. பாராட்டுகள்.
//நான் சாப்பிட்டேனா என்ற கேள்வி கேட்கப்பட்டதே இல்லை..//
//போதையில் அவர் அணைத்த வேளையில் எதை நான் மறந்திருக்க வேண்டும்?! //
வலிமிகுந்த வரிகளில் வேதனையை உணர முடிகிறது.
அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள் பெண்களின் உணர்வுகளை
ReplyDelete