காற்று பட்டதும்
உறங்கிவிடும் குழந்தையாய்
சட்டென்று உறங்கிவிட்டாள்
என் மடி சாய்ந்து
எத்தனை நாள் உறக்கத்தை
உறங்குகிறாள் இன்று?
இத்தனை அழகாய் அவளை
கண்டதில்லை என்றும்
சுவர் ஓர புகைப்படத்தில்
கருப்பும் வெள்ளையுமான நிறத்தில்
ஒற்றை ரோஜாவுடன்
சிரித்தபடி நிற்பது
சத்தியமாய் அவள் தான்
அந்தச்சிரிப்பு தொலைக்கப்பட்டது
என்னால் தான்..
நான் அறியா
அவளின் துன்பங்களை போல்
நோயும் அவளறியாமல்
கொன்று போட்டதோ?
அழகான வீடு
அன்பான மக்கள்
தெய்வீக பூஜைகள்
இனிமையான பாடல்கள்
மலர்கள் தரும் தோட்டம்
மனம் விரும்பும் அமைதி
உப்பு சரியாய் உணவு
உடல் நலிவில் பத்தியம்
மென்மையான தலைகோதல்
நள்ளிரவின் அணைப்புகள்
நிம்மதியான உறக்கம்
நேர்த்தியான உடைகள்
மிளிரும் காலணிகள்
பாதுகாப்பான பயணங்கள்
நிறைந்த சேமிப்பு
வாழ்த்து அட்டைகள்
பிறந்தநாள் பரிசுகள்
விருந்தினர் உபசரிப்பு
பிள்ளைகள் படிப்பு
நிஜமான நேசம்
கள்ளமில்லா சிரிப்பு
சோர்ந்தபோது ஆறுதல்
குற்றமில்லா நட்பு
குறையில்லா வாழ்க்கை
ஒரு கோப்பை தேநீர்
ஒன்றுக்கு கூட
நன்றி சொன்னதில்லை
நான் அவளுக்கு..
வேலைக்காரியாய் வாழ்ந்துவிட்டாள்
என்றே நினைத்திருந்தேன்
பொய்த்துவிட்டது நினைவுகள்
என் தாயை இழந்துவிட்டேன்
மீண்டும் ஒருமுறை
மனைவி என்னும் மந்திரத்தால்
ஒரு தேவதையை வசப்படுத்திய
மோசமான மந்திரவாதி நான்
அவளுக்கான என் தேடல்கள்
காயப்படுத்த போவதில்லை என்னை
ஆனால்..
அவள் விட்டுச்சென்ற தடங்கள்..?
இழப்பெல்லாம் கணக்கெடுக்க
என் ஆயுள்கூட போதாது
கண்ணீர் கண்ணிமைகளை தாண்டுகிறது
அமைதியாய் இருக்கிறாள் அவள்
எப்பொழுதும் போலவே என்னெதிரில்..
உணர்ந்து பேச ஓராயிரம் இருக்கிறது
என் ஒருவார்த்தை மன்னிப்பை கேட்க
அவளில்லை இன்று
காலம் கடந்த ஞானங்களில்
தத்துவங்கள் பேசவில்லை
தவறவிட்டவனின் தப்புசெய்தவனின்
பாவமன்னிப்பு வரிகள்..
இனி வாழ்வதற்கு
அவளில்லை என்றபோதும்
வாழ்ந்துவிடவே எத்தனிக்கிறேன்
கனவுகளிலாவது அவள் கைக்கோர்த்து
இத்தனை நாள் என்னுடன்
அவள் வாழ்ந்தது போலவே..
என்றேனும் அவள்
கேட்கக்கூடும் நான் பேசுவதை..
>>மனைவி என்னும் மந்திரத்தால்
ReplyDeleteஒரு தேவதையை வசப்படுத்திய
மோசமான மந்திரவாதி நான்
ஆஹா.. அழகிய சொல்லாடல்
>>என்றேனும் அவள்
ReplyDeleteகேட்கக்கூடும் நான் பேசுவதை..
அழகிய நம்பிக்கை
தமிழ் விளையாடி இருக்கிறது சகோ..
ReplyDeleteஅசத்தலான கவிதை..
ReplyDeleteவாழ்த்துக்கள்.. நண்பரே...
அருமையான கவிதை
ReplyDeleteஆழமான வரிகள்
ஒரு படைப்பாவது இப்படி என்னால்
ReplyDeleteபடைக்க முடியுமா என எண்ணிச் சோர்ந்து போகிறேன்
அருமையான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
மிக மிக அருமை
ReplyDelete