நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க..

10 April 2011

தேடல்களை தொலைத்துவிட்டேன்..




சுற்றமும் நட்பும் சூழ 
ஒரு சுபயோக சுபதினத்தின் 
சுகமான  இரவில்  
உள்ளனுப்ப பட்டேன் தன்னந்தனியாய் 
முதல் அனுபவம் என்பதால் 
பதற்றமும் பாவமான முகமுமாய் நான் 

அம்மா என்று கதறியபடி 
வெளியே ஓடி வந்துவிடலாமா? 
மற்றவர்களுக்கும் இதே அனுபவங்கள் இருந்திருக்குமா?!
சொல்லமுடியா துக்கம் நெஞ்சை அடைக்கிறது
எப்படியோ சமாளித்தபடி ஏறிட்டு பார்த்தால்
இனிப்பை நீட்டுகிறாள் அவள்.. 

இப்போது இனிப்பா?
அப்படிப்பட்ட மனநிலையில் இல்லையடி நான்.. 
கதறுது என் மனம்..
இவளுக்கு இதெல்லாம் புரியாது..
எத்தனை பேரை இப்படி பார்த்திருப்பாள்?
தேற்றிக்கொள்கிறேன் என்னை நானே 

அப்படியே அசந்து உறங்கிவிட்டேன்..
மீண்டும் விழித்தபோது..
இரவா? பகலா?
ஒன்றும் விளங்கவில்லை..
ரொம்ப பசிக்கிறது 
எத்தனை வேலைகள் இன்று மட்டும்..  

முடிவில் இறங்கவேண்டிய இடம்..
இதுதானா?.. 
வித்தியாசமான மனிதர்கள்
வழிதெரியா பாலைவனத்தை விட
மொழிபுரியா தேசம் 
கொடுமையிலும் கொடுமை

ஆட்டோ ஒன்றையும் காணோம்
யாரோ நிற்கிறார்கள் 
என்பெயர் சுமந்த பலகையோடு
தப்பித்தாயடா மகனே இன்று நீ..!
போகும் வழியெல்லாம்.. 
எழுத்து கூட்டிப்படித்தாலும்
எதுவும் விளங்கவில்லை..

வாழ ஆரம்பித்துவிட்டேன்
அப்பப்பா..! எவ்வளவு கற்றுக்கொள்வது
சமைப்பது பெருக்குவது
துவைப்பது துலக்குவது
எல்லாம் நானே நானே..
பாராட்டத்தான் யாருமே இல்லை..

எப்போவாவது புகைப்பதும்
ஏதோ கொஞ்சம் குடிப்பதும்
நடந்து கொண்டுதான் இருக்கிறது
இல்லையென்றால் அவமரியாதையாகிவிடும்
அப்பாவுக்கு மட்டும் தெரிந்தால்..
என் மரியாதை மாறிவிடும்.. 

வார விடுமுறைகளில் 
நான் நாட்டியம் ஆடுவதை 
புகைப்படம் எடுத்து 
பேஸ்புக்கில்  போட்டால் 
ஒருவன் கூட கமெண்ட் போடவில்லை
பொறாமை பிடித்தவர்கள்
புகையட்டும் உள்ளுக்குள் 

தனிமையின் கொடுமைகளில் 
இட்லி தோசைகளில் இன்பமிருப்பதாய் நானும்
இந்தியன் வங்கியின் இருப்புகளில் இருப்பதாய் 
அப்பாவும், என் நண்பர்களும்
பட்டிமன்றங்கள் பல நடத்தினாலும்
பெரும்பான்மை அவர்களுக்குத்தான் 

என்றாவது வரும் பருப்புபொடியின் பின்
அதைவிட கனமான பொருட்களை  
அனுப்பசொல்லி விண்ணப்ப கடிதங்கள் 
எத்தனை அனுப்பினாலும் 
சலிப்பதேயில்லை அவர்களுக்கும்
அதைச்சுமந்து செல்லும் விமானங்களுக்கும் 

ஓயாமல் உழைக்கும் ஒரு மணித்துளியில்
அம்மாவின் நினைவு வந்துவிட்டது..
நான் அழைத்த வேளையில் 
அவள் 'தங்கம்' பார்த்துக்கொண்டிருப்பதாகவும்
'தென்றல்' இன்னும் முடியவில்லை என்றும் 
அரைமணி கழித்து அழைக்கச்சொல்லி 
துண்டிக்கிறாள் தொடர்பை..

எத்தனை நாட்கள்  இப்படியே போவது!
தாய்மண் அழைக்கிறது..
இஷ்டப்பட்டும் கஷ்டப்பட்டும் 
வாங்கிப்போன பரிசுகளை 
நண்பர்களுக்களிக்கும் வேளையில்
எவனோ ஒருவன் கேட்கிறான் 
'ஏன்டா! எல்லாரும் நானும் ஒண்ணா?'
'இப்படி வாங்கிட்டு வந்திருக்க எனக்கு..' 
ஒருவேளை சட்டையளவு சிறியதாகி விட்டதா?

எழுத்துக்களையும் ஏக்கங்களையும் 
எனக்கு வெளிப்படுத்த தெரியவில்லை
என்றாலும் படிக்கிறேன் 
ஏதாவது வலைப்பதிவுகளை.. 
எப்பொழுதாவது நேர்கிறது..
என் மனம்போன்ற ஒன்றை படிப்பதற்கு
'என்னை போல் ஒருவன்!' 

கடற்கரை மணலில்
சூரிய குளியலுக்காய் 
அரைக்கால் சட்டையுடன்  
அண்ணாந்து படுத்தபடி
வெறித்திருக்கும் நிமிடங்களில் 
தொலைதூர புள்ளியாய்
வெளிச்சம் காட்டிச்செல்லும் விமானம்

தேடல்களை தொலைத்துவிட்டேன்
தேவைகளையும் குறைத்துவிட்டேன் 
பயணங்களில் ஆசையில்லை இப்பொழுது 
பழகிப்போன தேசமாகிவிட்டது இதுவே..
யாரும் வந்துவிடாதீர்கள் 
இன்பமிருப்பதாய் இங்கே..!!!

8 comments:

  1. நன்றி நட்பு! :)

    ReplyDelete
  2. எங்கையோ போய்டீங்க...
    இந்த கவிதை புலம்பெயர்ந்தவனின் மனநிலையை பிரதிபலிக்கிறது...

    ReplyDelete
  3. நன்றி பூக்கள் உங்களுக்கு பிரகாஷ்! :)

    ReplyDelete
  4. நண்பா!.. எல்லாம் நம்ம கதை தான் :)
    சரி தானே கோபி?

    ReplyDelete
  5. மிக அருமை...நான் சென்றது இல்லை..கேள்வி ஞானம்தான்...தங்களின் உணர்வுகளுக்கும், பகிர்வுக்கும் மிக்க நன்றி...

    ReplyDelete
  6. நன்றி அருண் :)

    ReplyDelete
  7. அன்பு தோழி என்றுதான் பார்த்தேன் உங்கள் வலைபூ மிக அழகாக பதிவு அயல் நாட்டில் இருக்கும் ஒரு நண்பனின் மனதை படம் பிடித்து கட்டி உள்ளது உங்கள் பதிவு .

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...