நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க..

09 November 2012

"வலியும்..தீபாவளியும்.."


எல்லா ஆண்களும்
ஏன்  அப்பாவிகளாகவே இருக்கிறார்கள்?
பண்டிகை காலத்தில் 
கூடுதல் அப்பாவிகள் 
இதோ கிளம்பியாயிற்று 
பண்டிகைகால கொண்டாட்டங்கள்
முடிவெடுப்பது அவள்
என் முடியை கொடுத்தாவது 
மன்னித்துக்கொள்ளுங்கள் 
என் தலையை கொடுத்தாவது  
அதை முடித்துத்தருவது நான்

ஒன்றாம் வகுப்பு பாடத்தில் வருமே..
ஒரு தோசை பாடல்
அப்பாவுக்கு நாலு என்று..
அது ரொம்பவே சரி 
எனக்கு ஒரு நாலு முழம் வேட்டி 
அம்மாவுக்கு மூணு 
ரொம்பவே சரி 
பட்டுபுடவை, காட்டன் புடவை, சுடிதார்
மீதி உங்கள் கற்பனைக்கு..

மெல்லிய குரலில் கேட்டேன் 
என்ன இனிப்பு செய்ய போகிறாய்?
'குலோப்ஜாமூன்'
மீண்டும் ஏதோ சொல்கிறாள்..
என்னம்மா என்கிறேன் 
அதை செய்யவும்
என்  உதவி தேவையாம்..
என்னத்தை சொல்ல?
அந்த இனிப்பை போலவே
நானும் மூழ்கியபடி
அது சர்க்கரை தண்ணீரிலே 
நான் உப்பு கண்ணீரிலே 

அடுத்தது நகைக்கடை..
அய்யய்யோ!
இப்போ எதுக்கும்மா அங்கே..
கேட்க ஆரம்பிக்கும் போதே
'இப்போ வாங்கினால்  
சிறப்பு தள்ளுபடி' என்கிறாள்..
நகை வாங்குவதையே
தள்ளுபடி செய்தால் நலம்..
நமுட்டு சிரிப்பு சிரித்துக்கொள்கிறேன்
வேறு என்ன செய்ய..
ஏதோ வாங்கினாள் 
உங்களுக்கு என்னும் போதே..
சொல்லிவிட்டேன்..
'நானெல்லாம் நகை போடாமலே அழகென்று"

அடுத்தது எலெக்ட்ரானிக்ஸ் கடை 
இங்கே தள்ளுபடி இல்லை 
பழையதை மாற்றி புதுசாம் 
பயந்து போய் 
கடைக்கு வெளியிலேயே நின்றபடி
அவளை மட்டும் அனுப்பினேன்..
சற்று நேரத்தில் 
வெறும் கையுடன் வந்தாள் 
மகிழ்ச்சியுடன் கேட்டேன் 
எதுவும் வாங்கவில்லையா என்று 
பின்னாடி டெம்போவில் வருகிறதாம் 

''வேற என்னம்மா..
வீட்டுக்கு போகலாமா?''
''இல்லைங்க..
சாப்பிட்டுட்டு போயிடலாம்
சமைக்க முடியாது.
டயர்டா இருக்கு..''
''அப்பாடா.. முடிந்தது
கிளம்பலாமா?''
அடுத்த கடையை தாண்டும்போது 
''அப்படியே ஒரு பாக்கெட் 
நூடுல்ஸ் வாங்கிடுங்க..''
''ஏம்மா?''
''நாளைக்கு காலைல அதுதான்..'' 
பிரம்மச்சாரியாய் நான் 
சாப்பிட்ட நூடுல்ஸை விட 
இப்போ சாப்பிடுவது அதிகம் 

தீபாவளியும் வந்துவிட்டது..
தொலைக்காட்சியை போட்டால் 
பாட்டு ஓடுகிறது..
"தீபாவளி.. தலதீபாவளி.."
அட போங்கப்பா..
தீபாவளி என்பது
ஆண்கள் பண்டிகையா 
இல்லை 
பெண்கள் பண்டிகையா?
இதுபோன்ற பட்டிமன்ற தலைப்புகள் 
தொலைகாட்சிகளுக்கு கிடைப்பதில்லையா?

07 November 2012

பிரிவின் வலி


பிரிவின் வலி 
உனக்கு புரியவேண்டுமென்றே
ப்ரியம் தொலைத்ததாய் நடிக்கிறேன் 

ப்ரியம் தொலைத்ததின் வலி
எனக்கு புரியவேண்டுமென்றே 
பிரிந்து போவதாய்
நீயும் நடிக்கிறாய்


வலிகள்  குறைய 
வழிகள் ஏதும்
புரியாத நிலையில்
வாழ்ந்துகொண்டு இருக்கிறேன்
இலைகள் நனைந்தாலும்
வேர்கள் நனையாத மரங்களாய்

தூரங்கள் தொலைத்த
ஒரு காதல் வேண்டுமென்று
தொலைத்து கொண்டிருக்கிறேன்
என் பாதைகளை..

என் இருப்பிருக்கும்
இறப்பிற்கும் நடுவே
நீளும் பயணங்கள்
உன் சந்திப்புகளை எண்ணியபடி..

எல்லா அழுகைக்கும் நடுவில்
ஒரு சிறு பிள்ளையெனவே 
உன் முகம் பார்க்கிறேன்
அன்னையெனவே எனை அணைத்து
நீ தரும் சிறு முத்தத்துக்காய்..

29 August 2012

பேசாதே!



இறக்கும்வரை வாழ்ந்துக்கொண்டு இருப்பேன்
வாழும்வரை இறந்துக்கொண்டும் இருப்பேன்
உன் மீதான காதலால்

எச்சில் என 
என் முத்தங்களை
துடைக்கும் முன்
சற்றே ருசித்துப்பார்..
உப்பின் சுவையும் கலந்திருக்கும் 
உன்னாலே உருவான
என் கண்ணீர் துளிகளினால்..

நாம்
பிரிந்திருக்க
தேவைப்படவில்லை
ஒரு காரணமும்
ஆனால்..
சேர்ந்திருக்க
தேவைப்படுகின்றன
சில காரணங்களாவது

உன்னுடன் பேசாமல்
ஒரு நிமிடமாவது
இருக்க முடியுமா?
மௌனமாய் கேட்கிறது
என் அலைபேசி..

மயிலிறகு அதிகமானால்
வரும் பாரத்தை விட
காதல் அதிகமானால் 
வரும் பாரம் அதிகம்தான்!!!

17 August 2012

மழை வரும் போதெல்லாம்


மழை வரும் போதெல்லாம்
நீயும் வருகிறாய்
துளிகளாக இல்லாமல்
நெஞ்சில் வலிகளாக

கையில் பிடித்தபின்னும்
நிற்காத துளிகளாய்
நாம் கைபிடித்த பின்னும்
நீண்ட தூரத்தில்

ஏதோ பேச நினைத்து
நான் அழைத்த அழைப்பெல்லாம்
உன் குரல் கேட்ட நொடியினிலே
உடைந்து சிதறுகின்றன
கண்களில் நீர் துளிகளாய்
காதலுக்கு மறுபெயர் கண்ணீரா?

துவைக்க விருப்பமில்லாத
வேர்வை வாசம் நிறைந்த
உன் சட்டை 
உனக்கான இடத்தை 
என்னுள் நிரப்பியபடி

நனைந்த இலைகள் கூட
ஒன்றை ஒன்று முத்தமிட்டபடி
நான் நிற்கிறேன்
மரமெனவே..

ஜன்னல் கம்பியிலே
இரு பறவைகள்..
ஒன்றாய் அணைப்பினிலே
நானும் 
நீ பரிசளித்த பொம்மையும்
அவற்றை போலவே...

மிக மெல்லிய 
காதல் பாடல்
எங்கோ ஒலிக்கிறது
நம்முடைய 
பிரிவின் குரலாய்..

எனக்கிருக்கும் வலி
உனக்குள்ளும் இருக்கும்தானே?
உன்னை அழைக்க முயல்கிறேன்
மீண்டும் மழை..

17 July 2012

ஒரு சிற்பமெனவே



அமைதியான கோவிலில்
அமைதியற்று இருக்கிறேன்

ஊனமுற்ற சிலைகளை
உற்று நோக்குகிறேன்
நடமாடும் தேவையின்றி
நடனமாடும் பாவனையுடன்..
அவை நடிக்கின்றனவா?!

செதுக்கப்படும் போதே ஊனமுற்றனவா?
இல்லை..
காலப்போக்கில் ஊனமுற்றனவா?
விருப்பமின்றி வாழ்தலை போல
அவற்றின் முகங்கள் தோன்றவில்லை
மங்கலான ஒளியிலும் 
மந்தகாசமாய் ஒளிர்கின்றன

ஒரு வலி
ஒரு வேதனை
ஒரு வெறுப்பு
ஒரு சேர மனதில்..
ஒரு நிலையற்று தவிக்கிறேன்

குற்றம் புரிந்தவனின்
எண் குறிப்பு அடையாளங்களாய் 
எனக்கான அடையாளங்கள்
உடல் ஊனத்தினாலே
உடலை விட
உள்ளம் வலிக்கிறது

எல்லையற்று போகிறது
என் சிந்தனைகள்

ஓடி வந்த
சிறு குழந்தையொன்று
நந்தியை தழுவியபடி
கேட்காத காதுகளில்
கேள்விகளாய் கேட்கிறது
மூடியிருக்கும் காதுகளை
வேண்டுதல்களால் நிரப்புகிறது

ஒரு சக தோழனாய்
நந்தி நிற்கிறது
அக்குழந்தையின் முன்னே

மீண்டும் பார்க்கிறேன் சிலைகளை
மேலும் ஒளிர்கின்றன
என் மனதை போலவே..

15 June 2012

இப்படிக்கு அம்மா!



நெடுநாட்களாய் உன்னை காணவில்லை
நீ வருகின்ற தேதியும் தெரியவில்லை
பெரியதாய் நான் எதையும் சேர்க்கவில்லை
பேதைமை நிறைந்த என் அன்பை தவிர

வீட்டு வாசலில்
ஏறி இறங்க படிக்கட்டுகளும்
அதன் நடுவில்
நீ விளையாட
ஒரு சறுக்குமரமும்
கட்டி முடித்தது
காலப்போக்கில் உடைந்துவிட்டது
என்மனதை போலவே

நம் வீட்டுத்தோட்டத்தில்
நட்ட செடிகள்
மரங்களாகி விட்டன
தேவையில்லாத உறவுகளாய்
இலைகள் கூட உதிர்ந்துவிட்டன
உன் வரவிற்கான
அவகாசங்களும் குறைந்துவிட்டன

மிக குறுகிய
என் மடியில்
இப்போதும் இருக்கிறது
உனக்கோர் இடம்
மிக வளர்ந்த
உன் மனதில்
எனக்கோர் இடம்
இப்போதாவது இருக்கிறதா?!

உன்னை பற்றி
எனக்கு பல கனவுகள்
உன்னை பற்றி
உனக்கும் பலபல கனவுகள்
உன் கனவுகள் கைகூட
விற்றுவிட்டேன் நான்
என் கனவுகளையும்
உறக்கத்தையும்!

என் உடல்நலம் குறித்து
என்றோ ஒருநாள் விசாரிக்கிறாய்..
வறுமையும் வயோதிகமும்
தனிமையும் தள்ளாமையும்
தனித்தனியே வாட்டினாலும்
நலம், நலமறிய அவா!
என்றே சொல்லி
நலிந்து போகிறேன்

உன்னை வற்புறுத்தும் எண்ணம்
எப்போதும் எனக்கு இருந்ததில்லை
மிக மெல்லிய குரலில்
உன்னிடம் இறைஞ்சுகிறேன்
ஒரே ஒரு முறை
உன்னை பார்த்துவிடவே துடிக்கிறேன்
உயிர்போகும் பயத்தில் இல்லை..
பார்வை குறையும் பரிதவிப்பில்!



குறிப்பு: இன்றைக்கு காலையில் தினமலர் பத்திரிக்கையை படித்துக்கொண்டிருந்தேன். அப்போது படிக்க நேர்ந்தது கேரளாவில் வயதான ஒரு தம்பதியர் குளியலறையில் மூன்று தினங்கள் மாட்டிக்கொண்டதை. கணவருக்கு உடல்நிலை சரியில்லாமல் வாந்தி எடுத்துகொண்டிருக்க, உதவி செய்ய மனைவி முயலுகையில் கதவு திடீரென்று மூடிக்கொள்ள, கதவை திறக்க இயலாமல், தண்ணீரை மட்டும் குடித்தபடி இருந்திருக்கின்றனர். பிறகு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மருத்துவமனையில் சேர்த்து உதவி செய்து இருக்கின்றார்கள். ஆனால் இது பற்றி அந்த வயதான தம்பதியர், தங்கள் இரு பிள்ளைகளுக்கு தெரிவிக்க கூட விருப்பமின்றி இருந்திருக்கிறார்கள். மிக வேதனையாக இருந்தது! இளமையில் வறுமையும், முதுமையில் தனிமையும், கொடுமையிலும் கொடுமை! இன்றைய பதிவு அதை ஒட்டி எழுதி இருக்கிறேன்!

07 June 2012

என் கண்களையே பார்க்கிறாய்


*************************************************************
ஒரு சிறுபிள்ளை என
உன்னை நினைத்து
சமாதனப்படுத்த முயல்கிறேன்
சட்டென்று
மடியில் படுக்கிறாய்
மார்புகளை தேடும்
குழந்தை என இல்லாமல்
என் மனம் தேடும் குழந்தையாய்..
**************************************************************
**************************************************************
வலிக்கிறது என்று
நான் சொல்லுகையில்
என் கண்களையே பார்க்கிறாய்
கண்ணீர் சிந்திவிடுவேனோ என்று
உன் கைகளில்
முகம் புதைத்துக்கொள்கிறேன்..
என்னுடைய
சிறுதுளி கண்ணீரும்
உனக்கே சமர்ப்பணம்..
***************************************************************


03 June 2012

பரிசுகள் ஜாக்கிரதை!




நான் ஒரு தேவதையையும்
அவள் ஒரு தெய்வத்தையும்
திருமணம் செய்துக்கொண்டதாய்
மகிழ்ந்திருந்த வேளையிலே


திடீரென்று கேட்டாள்..
நாம் ஒரு நாய்க்குட்டி வளர்த்தால் என்ன?!
புது மனைவி கேட்டால்
புலிக்குட்டியே வளர்க்கலாம்
ஒரு நாய்க்குட்டி தானே!..


அடுத்தநாளே வாங்கிவந்தோம்..
அன்று இரவே
அவளுக்கும் எனக்கும் நடுவில்
அது உறங்கியது
அவளும் உறங்கினாள்
நான் மட்டும் உறங்கவில்லை!


பராமரிப்பு வேலைகளை
பாகுபாடின்றி பகிர்ந்துக்கொண்டோம்
காலைக்கடமைகள், குளியல்,
உணவுவூட்டல், உடல்நிலை கவனிப்பு,
இப்படி...
தீவிர கவனிப்பு வேலைகள் எனக்கும்
விளையாடுதல், நடைப்பயிற்சி,
கொஞ்சுதல், கூடவே வைத்திருத்தல்
போன்ற
தீராத கவனிப்பு வேலைகள் அவளுக்கும்


நடுநடுவே என்னை அவள்
கவனிக்க முற்படுகையில்
பாய்ந்து வந்து நிற்கும்
என்னை கண்காணித்தபடி
அவளை கண்ணடித்தபடி
இதில்..
பலநேரம் அது கதாநாயகனாகவும்
நான் வில்லனாகவும் மாறியதில்
அவளுக்கு அளவுகடந்த பெருமை
எனக்கு அடக்கமுடியாத ஆத்திரம்


அதை யாருக்காவது கொடுத்துவிடலாம்
என்று பேசமுற்படுகையில்
குமுறி விட்டாள்
நம் குழந்தையாய்
அது இருந்திருந்தால்
இப்படி யோசிப்போமா என்று
இரண்டு மாத குழந்தையை கூட
மாமியாரை வளர்க்கச் சொல்லலாம்
இதை வளர்க்க சம்மதிப்பார்களா?!
பள்ளியிலே சேர்க்கவும் வாய்ப்புகளில்லை


பாவம் புண்ணியம் மறந்து
நான் பாவம் என்கிற நிலையிலே
ஓர் முடிவெடுத்தேன்
பிறந்தநாள் பரிசென (!!!)
நண்பருக்கு கொடுப்பதென
மிக நீண்டசண்டைக்கும்
மிக நீண்டசமாதானத்திற்கும்
முடிவில்.. 
அவள் அழுகையுடன் சம்மதிக்க..
ஆனந்த அழுகையுடன்
அவளை நான் கைப்பிடிக்க..
அப்பாடா!

நண்பர்களே! 
உங்களில் யாருக்கு பிறந்தநாள்
இந்த வாரம்?!!!


20 May 2012

நீயும் நானும்!


ஒன்றும் சொல்வதற்கில்லை!



இரட்டை கோபுரங்களை
அருகருகில் பார்த்தபோது
ஒன்று என்னை போலவும்
மற்றொன்று உன்னை போலவும்
அருகருகில் நிற்கின்ற என்றேன்

உயர்ந்து நிற்பது
அவன் என்று
உடனே சொல்லுகிறான்

மௌனமாய் நிற்கிறோம்
கோபுரங்களும் நானும்


நண்பர்களும் உறவினர்களும்
ஓயாது வருகின்ற நாட்களில்
சமையல் அறைக்குள் கூட
எட்டிபார்த்திடாத அவன்
என்னை பற்றி சிரித்தப்படி
எல்லோரிடமும் சொல்லுவதெல்லாம்
"அருமையாய் சமைப்பாள்"
என்பது தான்

வெறுமையான சிரிப்புடன்
நான் நினைப்பதெல்லாம்
"சமையல் தெரியாத பெண்ணாய்
நான் இருந்திருந்தாலே
சந்தோசமாய் வாழ்ந்திருப்பேனோ?!"



06 April 2012

காயா? பழமா..?!



இன்றைய விடியலிலிருந்து
அமைதியாய் இருக்கிறான்
ஏனென்று கேட்டால்...
குறும்பாய் குற்றம் சொல்கிறான்
'இரவெல்லாம் உன்னை கொஞ்சியதில்
வார்த்தைகள் தீர்ந்துவிட்டன!'

17 March 2012

நீ கவலைகளை பரிசளிக்கிறாய்

நான் கவிதைகளை பரிசளிக்கிறேன்
நீ கவலைகளை பரிசளிக்கிறாய்


எதிர்பாராத நேரங்களில் 
எதிர்ப்பட்டு விடுகிறது
உன் கோபமும்
என் கண்ணீரும்

என் முகம் மறைத்து 
ஓடிவிடவே தோன்றுகிறது
நீ முகம் காட்டும் வேளைகளில்

என் கேள்விகளுக்கெல்லாம் 
உன் மௌனங்கள் 
சரியான பதிலில்லை என்றாலும் 
தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறேன்

பொறுமை இழந்து போகிறது
என் மனம் 
பெருமை இழந்து போன 
நம் காதலால்

'என்றாவது என்னை 
நீ புரிந்து கொள்வாய்'
உணர்ச்சிகள் மேலிட 
நான் பேசுகையில் 
உன் கண்கள் காட்டும் 
வெறுமைகள் 
எனக்கு புரியவேயில்லை

பருவமாற்றம் போலவே 
மாற்றி மாற்றி உன்னை 
வெறுத்ததிலும் விரும்பியதிலும் 
வறண்ட வானிலையில்
நம் காதல் நிலா

உன்னுடைய எல்லைகளில் நீயும்
என்னுடைய இயலாமைகளில் நானும் 
ஊடலும் கூடலுமாய் 
விளையாடுகையில்
ஏனோ..
என் நினைவில் வருகிறது 
சிறுவயதில் விளையாடிய 
'அப்பா அம்மா விளையாட்டு' 

13 February 2012

மீண்டும் ஒரு காதல் விளையாட்டு



அவள் விளையாட்டில் 
நானொரு பொம்மை
யாரோ திட்டியதற்கு
என்னை கோபிப்பாள்
என்னிடம் கோபம் கொண்டதற்கு 
தன்னையே திட்டிக்கொள்வாள் 

அவள் பேச ஆரம்பிக்கும்
தருணங்கள் எனக்கு வெளிச்சம் 
அதை முடிக்கும் தருணங்கள்  
கடவுளுக்கு மட்டுமே வெளிச்சம் 

சில நேரம் பெரியமனுஷியாய்
அறிவுரைகளை பேசுவாள்  
பல நேரம் சிறுகுழந்தையாய் 
அறிவுரைகளை வெறுப்பாள்

ரகசியங்கள் தொலைத்து 
என்னிடம் அவள் அழுகையிலே 
என்னை அவளிடம் 
தொலைத்த ரகசியத்தை  
யாரிடம் சொல்லி நான் மகிழ 

தேவதை கதைகள் கேட்பாள்
தினம் இரவில் என்னிடம் 
ஆனால் 
நான் சொல்லும் கதைகள் 
எல்லாம் அவளை பற்றியே

எல்லாவற்றையும் என்னிடம் 
சொல்லிக்கொண்டே இருக்கிறாள் 
'என்னை காதலிக்கிறேன்' 
என்பதை தவிர 

பாடல்களும் புத்தகங்களுமாய் 
பகிர்தல்கள் நடக்கையிலே 
தேடல்களும் ஊடல்களும்
தொடரும் உறவினிலே
ஒரு நாள் சொல்லியேவிட்டேன் 

கண்ணில் நீர் வழிய 
அவள் நிற்க
கலவரம் கொண்டு 
நான் தவிக்க 
நட்பென்னும் மந்திரத்தை 
அவள் ஓதுகிறாள்  
நடுக்கடலில் மூழ்குகிறது 
என் காதல் கப்பல் 

எப்போதும் போலவே
இப்போதும் சிரிக்கிறாள் 
இயல்பாக பேசி
எப்போதும் போலவே 
இப்போதும் இருக்கிறேன்
அவளை புரிந்தவனாய் 

எனக்கு தெரியும்
நான் இல்லாத விளையாட்டை 
அவள் விரும்பமாட்டாள் என்று... 

Related Posts Plugin for WordPress, Blogger...