நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க..

17 July 2012

ஒரு சிற்பமெனவே



அமைதியான கோவிலில்
அமைதியற்று இருக்கிறேன்

ஊனமுற்ற சிலைகளை
உற்று நோக்குகிறேன்
நடமாடும் தேவையின்றி
நடனமாடும் பாவனையுடன்..
அவை நடிக்கின்றனவா?!

செதுக்கப்படும் போதே ஊனமுற்றனவா?
இல்லை..
காலப்போக்கில் ஊனமுற்றனவா?
விருப்பமின்றி வாழ்தலை போல
அவற்றின் முகங்கள் தோன்றவில்லை
மங்கலான ஒளியிலும் 
மந்தகாசமாய் ஒளிர்கின்றன

ஒரு வலி
ஒரு வேதனை
ஒரு வெறுப்பு
ஒரு சேர மனதில்..
ஒரு நிலையற்று தவிக்கிறேன்

குற்றம் புரிந்தவனின்
எண் குறிப்பு அடையாளங்களாய் 
எனக்கான அடையாளங்கள்
உடல் ஊனத்தினாலே
உடலை விட
உள்ளம் வலிக்கிறது

எல்லையற்று போகிறது
என் சிந்தனைகள்

ஓடி வந்த
சிறு குழந்தையொன்று
நந்தியை தழுவியபடி
கேட்காத காதுகளில்
கேள்விகளாய் கேட்கிறது
மூடியிருக்கும் காதுகளை
வேண்டுதல்களால் நிரப்புகிறது

ஒரு சக தோழனாய்
நந்தி நிற்கிறது
அக்குழந்தையின் முன்னே

மீண்டும் பார்க்கிறேன் சிலைகளை
மேலும் ஒளிர்கின்றன
என் மனதை போலவே..
Related Posts Plugin for WordPress, Blogger...