நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க..

27 March 2011

அம்முகுட்டியும் சேகர் அண்ணாவும்


அம்மா ரொம்ப அலுத்துக்கரா எனக்கு சோன்பப்டி வாங்கிதரத்துக்கு..  தினமும் பைசா தரமுடியாதாம். வீட்டுலையே திங்கறதுக்கு பண்ணி தரேன்னு சொல்றா. ஆனா அவளுக்கு சோன்பப்டி மட்டும் பண்ணிதர  தெரியாதாம். என்ன நினைச்சிட்டு இருக்கா இந்த அம்மா?! எனக்கு புடிச்சத பண்ணி தராம அவ இஷ்டத்துக்கு பண்ணிதரேன்னா நான் எப்படி சாப்பிடறது?!  என்னால நேத்திக்கு சந்தோசமா இருக்க முடியாம போய்ருக்கும், சேகர் அண்ணா மட்டும் இல்லன்னா.. இருங்க.. எப்படின்னு சொல்றேன். சேகர் அண்ணா ரொம்ப நல்லவரு.. உங்களுக்கு கூட அவரை ரொம்ப பிடிக்கும்.. ம்ம் ஆமா..  அவரு காலேஜ்ல படிக்கறாரு. சிகப்பா ஒல்லியா உயரமா இருப்பாரு. அதைவிட முக்கியமான விஷயம் இருக்கு நான் அவரை நல்லவருன்னு சொல்றதுக்கு.. என்ன தெரியுமா?


எப்பவும் போல நேத்திக்கும் சோன்பப்டிகாரன் காலைல மணியடிச்சிட்டே  போனானா.. அப்போ நான் அம்மா கிட்ட ரொம்ப அடம்புடிச்சி அழுதேன் சோன்பப்டி வாங்கி தரசொல்லி. அம்மா வாங்கியே தரமாட்டேன்னு கண்டிப்பா சொல்லிட்டா. கெஞ்சி கேக்கறேன்.. அழறேன்.. கத்தறேன்.. அம்மா ரொம்பவே மோசம்..அமைதியாவே இருக்கா. சோன்பப்டிகாரன் வேற போய்டுவான்... மணி சத்தம் கேட்டுட்டே இருக்கு.. ஐயோ!  அவன் போறானே... தொண்டை வலிக்குது.. இப்போ என்ன பண்றதுன்னு நான் கஷ்டப்படும்போது..  

அப்போ தான், என்னோட கஷ்டத்த பாத்த சேகர் அண்ணா "குட்டி பொண்ணு! என்னைய கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்லு.. தினமும் நான் உனக்கு சோன்பப்டி வாங்கி தரேன்", ன்னு சொன்னதும், அச்சோ! எனக்கு அப்படி ஒரு சந்தோசம்... உடனே சொல்லிட்டேன் "சேகர் அண்ணா! நான் உங்கள தினமும் கல்யாணம் பண்ணிக்கறேன், நீங்களும் எனக்கு  தினமும் சோன்பப்டி வாங்கிதாங்க", ன்னு. உடனே சோன்பப்டி வாங்கி தந்துட்டாரு சிரிச்சிகிட்டே. அம்மா கூட சிரிக்கறா.. இப்போ சொல்லுங்க.. சேகர் அண்ணா எவ்ளோ நல்லவரு?! 

25 March 2011

அம்முக்குட்டியும் அம்மாவும்


        

அம்முகுட்டிக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு. 
ஏன் என்னைய யாருமே புரிஞ்சிக்கல? 
அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நிறைய சண்டை வருது. ஆனா காரணம் கண்டுபுடிக்க என்னால முடியல. அம்மாகிட்ட கேட்டா அழறா. அப்பா திட்டறாரு. 

நான் குட்டிபாப்பா அப்படின்னு யாரும் என்னைய மதிக்கறதே இல்ல! ஒரு நிமிஷம் மூக்கை உறிஞ்சிக்கறேன்.. அப்படி பாக்காதீங்க! என்னோட சட்டைலதான் தொடைச்சிக்கறேன். யோசிச்சி யோசிச்சி கடைசியா கண்டுபுடிச்சேன். 
தப்பெல்லாம் அப்பாமேல தான். எப்படின்னு கேக்காதீங்க.. அது அப்படி தான்!என்னைய தான் எப்போவுமே திட்டிட்டே இருக்காறே.  அதே மாதிரி தான் அம்மாவையும் கொடுமையா படுத்துறாரு. 

இப்போ ஒரு நல்ல யோசனை வந்துடுச்சி. நேரா அம்மா கிட்ட போனேன். "அம்மா! இந்த அப்பா ரொம்ப மோசம். சண்டை போடறவங்க கூட பழககூடாதுன்னு நீதான சொல்லி இருக்க.. 
அதனால நாம ஏன் இந்த அப்பாவை விட்டுட்டு 
வேற ஒரு அப்பா பாக்ககூடாது?!", அப்படின்னு 
தான் கேட்டேன். அம்மா முகம் எப்படி இருந்தது தெரியுமா? பாவமா இல்ல கோவமான்னு புரியல.

"இனிமே இப்படி எல்லாம் பேசாத செல்லம்"னு மட்டும் சொல்லிட்டு என்னைய அனுப்பிட்டா. மறுநாளே அப்பாவும் அம்மாவும் சந்தோசமா பேசிட்டு இருக்காங்க. ஏன் அம்மா இப்படி இருக்கா?! தைரியமா சண்டை போடவேணாமா? எனக்கு புரியவே இல்ல.

பக்கத்துவீட்டு அருண் வேற என்னைய எப்போ பார்த்தாலும் அம்மா அப்பா விளையாட்டு விளையாட கூப்பிடறான். ச்ச.. நான் இந்த விளையாட்டுமட்டும் விளையாடவே 
மாட்டேன்பா.. ஒரே அழுகுணி ஆட்டம்!  

அவள் கொடுத்த மிட்டாய்..



மிட்டாய்களை நீட்டிக்கொண்டிருக்கிறாள் 
யார் கேட்டார்கள் இதை?!
அவளுக்கு பிறந்தநாளாம்! 
முகத்தை திருப்பிக்கொள்கிறேன்
மீண்டும் நீட்டுகிறாள்
என்ன செய்வது?
எடுப்பதா? மறுப்பதா?
 
ஆடைகளை சரிசெய்தபடி
அரைக்கண்ணால் பார்க்கிறாள் 
கள்ளச்சிரிப்பு வேறு கன்னங்களில் 
அம்மா அருகிலிருக்க 
எப்படி அவளை முறைப்பது?
மிட்டாய்களை வெறுப்பது?
 
அழகாய் இருக்கிறதா ஆடை?
எப்படி கேட்கிறாள்?!
மௌனமாய் தலையசைக்கிறேன் 
நிமிடங்கள் கரையும் வேளையில்
அம்மா சற்றே நகர..
 
சின்ன சிரிப்போடு 
அவள் வாயிலிருந்த மிட்டாயை 
என் வாயில் திணித்துவிட்டு
ஓடியே போய்விட்டாள்
திருட்டுக்குட்டி! 
 
திகைத்து நிற்கிறேன் 
வாழ்த்த மறந்தே போனேன்!
என்றாலும்..
அவளுக்கு புரிந்து இருக்கும்
என் அன்பு வாழ்த்துக்கள்!
 
காதலுடன் கரைகிறது
அவள் கொடுத்த மிட்டாய்! ©

23 March 2011

உன்னிடம் தோற்று போகவே..




நீ...
என்னுள் எங்கிருக்கிறாய் என்று கேட்காதே 
கண்டிப்பாக இதயத்தில் இல்லை
என் சுவாசத்தில் இருக்கிறாய் 
தூரத்து நட்சத்திரங்களையும், உன் அன்பையும் 
தினமும் கணக்கெடுக்க முயன்று திகைக்கிறேன் 

உன்னிடம் தோற்று போகவே 
ஒவ்வொரு நிமிடமும் சண்டையிடுகிறேன் 
தோல்வி கூட இனிக்குமா என்ன?!

உன்னை பார்க்காத நிமிடங்களில் 
இறக்கும் போதும் 
உன்னை காணும் நொடியில் 
உயிர்த்து விடுவேனென்ற நம்பிக்கை 
என் கண்களில் இன்னும்...

அடித்து வீழ்த்தும் கோபத்தோடு 
நான் போராடுகையில் 
அணைத்து முத்தம் தருகிறாய் 
இனியென்ன இருக்கிறது சொல்வதற்கு?


வேண்டாம் என்று சொன்னாலும் 
வெறுக்கிறேன் என்று நடித்தாலும் 
நகராமல் நின்று கொண்டிருக்கிறாய் 
உன் விரல்களை பிடித்தபடி நானும்...

காற்றோடு வீசும் பூவாசம் போல் 
உன் காதலோடு நாட்கள் நகர்கின்றன 
யாரோடு இணைந்து சிரித்தாலும் 
உன்னுடன் சிரிப்பதிலிருக்கும் மகிழ்ச்சியில்லை 

தொலைத்தது மனதை மட்டும்தான் என்றிருந்தேன் 
உன் காதல் சொன்ன நாளில்
தேடுகின்றேன் என்னையே எங்கே என்று?!

தேடிதேடி வார்த்தைகளை கோர்த்தாலும்
ஏதோ ஒன்று குறைகின்றது.. 
ஏனென்று கேட்காதே! 
உன்னோடு இருக்கும் மௌனங்கள் 
வார்த்தைகளை விட மதிப்பானவை 

என் அமைதிக்கும் கோபத்திற்கும் 
காரணங்கள் சொல்கிறாய் 
ஆச்சரியபட்டாலும் அவை உண்மைதான் 
எனக்கே புரியாத என்னை 
எப்படி கணக்கெடுக்கிறாய்?


அன்பு என்றால் நீ
காதல் என்றால் நீ
பரிவு என்றால் நீ
இப்படி பலபல சொல்லலாம் 
ஆனால் நான் என்றால் நீ
இதில் இருக்கும் மகிழ்ச்சிதான் எத்தனை!

சண்டை போட்ட வருடங்கள் 
மறந்திருந்த மாதங்கள்
புரிந்து கொள்ள முயற்சித்த மணித்துளிகள் 
காத்திருந்த நிமிடங்கள்
காதல் சொன்ன நொடி
எதை சொல்ல, இல்லை எதை மறக்க?

வாழ்க்கை போராட்டம் தான் 
சாதிக்க முடியுமோ இல்லையோ
சந்திக்க முடியுமென்ற நம்பிக்கையை தருகிறாய் 
இருள் சூழ்ந்த இரவில் 
எங்கேயோ மலை உச்சியில் 
ஒளிரும் தீபம் போல் 
தூரத்தில் இருந்தாலும் 
என் துணையாய் அசையாது நிற்கிறாய் 


எதையோ சொல்லத்தான் நினைக்கிறேன்
இன்னும் தேடிகொண்டிருக்கிறேன் 
உனக்காவது புரிகிறதா? :) 

என்னை குற்றம் சொல்லாதே!




குழம்பு இனிக்கிறது என்று
என்னை கோவிக்கிறாய்
என்ன செய்யட்டும்?!
அஞ்சரை பெட்டியில் அல்லவா
அளவற்ற உன் முத்தங்களை
யாருக்கும் தெரியாமல்
மறைத்து வைக்கிறேன்
எப்படி தடுத்தாலும்
தாளிக்கும் பொழுது
தவறி விழுந்து விடுகின்றன...
குழம்பு இனிக்காமல் எப்படி இருக்கும்?
ஒன்று கோபத்தை மறந்துவிடு
இல்லை.. முத்தங்களை நிறுத்திவிடு
மீண்டும் மீண்டும்..
என்னை குற்றம் சொல்லாதே!

22 March 2011

சகுரா மலர்களும் ஒரு நண்பனும்..




என்ன விளையாட்டு இது?
எல்லாம் கலைந்து கிடக்கிறது?
அப்பா திட்டவில்லை யாரையுமே
ஆனால் அம்மா அழுகிறாள்
அப்பாவும் அழுகிறார்
வீடு எங்கே காணோம்?
அப்பாவின் கார்?
அம்மாவின் சமையலறை?
தம்பியின் நாய்க்குட்டி?

என்ன இது!
குறும்பு செய்யும் தம்பியை
முகம் மூடி வைத்திருக்கிறார்கள்
அவனுக்கு மூச்சடைக்குமே!
கவலையாக இருக்கிறது..

எல்லாரையும் அழவைத்தது யார்?!
நேற்று பூமி சுற்றிசுற்றி
ரங்கராட்டினம் போல் சுழன்றது
எனக்கும் கொஞ்சம் பயம்தான்
இருந்தாலும் சந்தோசமும் கொஞ்சம்
தேவதை கதைகளில் படிப்பதுபோல்..
அடடா..
யாரிடமும் சொல்லமுடியவில்லை
அனுபவத்தை பகிரமுடியவில்லை..

என்னுடைய பொம்மைகள்
ஐயையோ! கையை காணோம்!
காலை காணோம்!
தலையை காணோம்!
எத்தனை ஆசையாய் வாங்கினேன்?!
பரவாயில்லை..
அப்பா மீண்டும் வாங்கித்தருவார்

ம்ம்..
பசிக்கிறது
யாரிடம் கேட்பது..?
எல்லாரும் பனி பொம்மை போல்
உறைந்து கிடக்கிறார்கள்
ஆ...!
பொம்மைகளை போலவே
இவர்களும் கிடக்கிறார்களே..
பயமாக இருக்கிறது

ஏன்?
எப்படி?
விளையாட்டில் அடிபட்டதா?
யார் இப்படி தள்ளினார்கள்?
என்னவென்று சொல்வது?
அம்மா!
அணைத்துக்கொண்டு அழுகிறாள்
மீண்டும் மீண்டும்
எல்லாரும் அழுகிறார்கள்
புரியவே இல்லை..

கேட்டால்..
நேற்று நிறையப்பேர்
கடவுளிடம் போய்விட்டார்களாம்
நல்லது தானே!
கடவுள் நல்லவர்
ரொம்பவே நல்லவர்
பத்திரமாக பார்த்துக்கொள்வார்
அப்புறமும் ஏன் அழுகிறார்கள்?

அச்சோ!
பள்ளிக்கு மணியாகி விட்டது..
ஆனால்..
என் நண்பனை காணோமே!
ம்ம்..
அன்பானவன் அவன்
சகுரா மலர்களுடன்
தினம் எனக்காய் வருபவன்  
நல்ல விளையாட்டு தோழன்
அழகாய் சிரிப்பான்
பொம்மைகள், மிட்டாய்கள்
பரிசாய் தருபவன்
அப்புறம்  
தினமும் ஒரு முத்தம்..

அவனையும் காணோமாம்
"...."
இப்பொழுது
நானும் அழுகிறேன்
என்ன செய்ய?
அவன் எங்கு போனான்?
எப்போது வருவான்?
எனக்கு மிகவும் பிடித்தமானவன்
எவ்வளவு நல்லவன்!
கடவுளிடம் கெஞ்சுகிறேன்..
அவனை மட்டும்
எனக்கு பரிசாய்
திருப்பி தந்துவிடு!
வேறு நண்பர்கள் வேண்டாம் 
எனக்கு அவன்தான் வேண்டும்..

நீண்ட அழுகைக்கு பின்
நினைத்துக் கொள்கிறேன்
கடவுள் அன்பு நிறைந்தவர்
அவர் அனுப்பி
என்றாவது அவன் வருவான்..
மீண்டும் மலர்கள் சுமந்து..
எனக்கே எனக்காய்..

விரல்களை விரித்து பார்த்தபடி
காத்துக் கொண்டிருக்கிறேன்.. ©

11 March 2011

உன் பக்கத்தில்.. ஒரு பொம்மையாகவேனும்!




அறிமுகமில்லா குழந்தைகளின்
எச்சில் முத்தங்கள் 
அளவில்லா நண்பர்களின் 
அன்பான விசாரிப்புகள்

படிக்க ஜெயமோகன் 
கதைக்க பக்கத்துவீட்டு பாட்டி 
மெகந்தி, ரங்கோலி
கோவில் பஜனைகள் 

ரோஜா, மல்லி, முல்லை
வாசம் நிறைந்த தோட்டம்
மொட்டை மாடி, நிலா
சப்தமில்லா இரவு

போகோ, கார்ட்டூன்
ஓவியங்கள், கவிதைகள் 
தியானம், யோகா
இளையராஜா, அகோன்.. 

உனக்கே உனக்கென்று 
அழகு குறிப்புகள்
உன் சமையலறையின் 
அமெச்சூர் குலோப்ஜாமூன்கள்

ஊர்சுற்ற ஸ்கூட்டி
உலகம் சுற்ற நெட்வொர்க் 
ஒரு குட்டி தூக்கம்
லேசாய் ஒரு நடைப்பயிற்சி 

சற்றும் யோசிக்காத 
சந்தோஷ சிரிப்புகள்
சட்டென்று கோவம் வந்தாலும் 
அதே வேகத்தில் மறந்து...

படுத்துறங்கும் வேளையில்
கரடி பொம்மை
மேலும் நிறைய பொம்மைகள்
விதவிதமான பெயர்களில் 

இப்படி ஏதாவது.. 
உனக்கென்று இருக்கிறது
என்னை மறந்ததாய் நடிப்பதற்கு 
ஆனால்...

எனக்கென்று இருப்பது
நீ மட்டும் தான்
உன் பக்கத்தில் 
என்னையும் வைத்துக் கொள்ளேன்
ஒரு பொம்மையாகவேனும்! ©

10 March 2011

கல்யாணம்.. அடட காதல் கல்யாணம்!



அரசியல்வாதி மாதிரியே
அள்ளி வீசிட்டு போன
உறுதி(உறுதியில்லா?!) மொழிகளை

நம்பித்தான் உனக்கு
ஓட்டு போட்டேன்
அப்பாவி பொதுசனம் போலவே
எங்கவீடு மொத்தமும்
ஓட்டு குத்தினோம்  
உனக்கு தான்
ஆனா உண்மையா
குத்து  வாங்கினது
நாங்க தான்..


எல்லாத்தையுமே மறந்துபோன
நீ..
ஆட்சிக்கு வந்ததும்

ஓட்டு வாங்க
நீ குடுத்த பொம்மையெல்லாம்
எப்போவுமே என்னைய மொறைக்குது
அப்புறம்..
தேடிபிடிச்சி நீ குடுத்த பரிசு
எதுவுமே வேலை செய்யலை

எது நடக்கனும்னாலும்
உனக்காக  
செய்கூலி சேதாரம் பாக்காம
செய்துபோட்ட நகையெல்லாம்
நீ போதலைன்னு சொன்னப்போ..
அப்பல்லோல அட்மிட் ஆனாரு
அட! எங்கப்பா தான் 

எங்க அக்கா தங்கச்சி
கூட்டணியெல்லாம் உனக்கு பிடிக்கல
ஆனா..
உன்னோட கூட்டணிய மீறி  
என்னால எதுவுமே பண்ணமுடியல
ஆட்சி கவுந்து போய்ட்டா?!

நீ பண்ணினது எல்லாம்
புத்தகமா போடவா?
இல்லை ப்ளாக்ல போடவா?
எப்படி போட்டாலும் 
கமெண்ட் நிறைய வரும்
ஆனா.. நீ அதையும் படிச்சிட்டு
அட்டக்காசமா அறிக்கை விடுவ
சட்டம் தன் கடமையை செய்யும்னு

அதிபர் மாதிரி நினைச்சிட்ட உன்னைய
வேற யாருக்கும் ஓட்டு போட
என்னால முடியாதுங்கற நினைப்பில
ரொம்பவே அதிகாரம் பண்ணிட்ட
என்னதான் செய்யறது நான் இப்போ?

உன்னோட கூட்டணிய தொடரவா?
இல்லை..
நானும் அரசியல்ல குதிக்கவா?
யோசிக்கறேன்...!!! ©

பொங்கல் நல்வாழ்த்துக்கள்!



நீ சிந்திய வியர்வையில் 
விளைந்த நெல்


முத்தம் சிந்தும் 
உன் இதழ்களின்மேல்
வளைந்த மீசை 
கரும்பை விட இனிக்கும்


கோலம் போட துவங்கி 
உன்னை வரைந்து முடிக்கிறேன்
உன் கண்கள் என்னையே தேட
பாலும் பாகுமாய் 
பொங்கி வழியுது நம் காதல்


நீ உண்ணும் பொங்கல் 
எனக்கு இனிக்கிறது
ஆனால் அது..
நான் செய்ததால் 
இனிக்கிறது என்கிறாய்..


இது.. பொங்கல் பண்டிகையா? 
இல்லை..
காதல் பண்டிகையா?!©

திருப்தி



கடவுளும் நரியும்  
நடுநடுவில் வருவதால்
சிரிப்பும் அழுகையுமான 
கனவுகளில்..
குழந்தைகள் உறங்கும்

அன்பே!
நான் வளர்ந்துவிட்டேன்
நீ மட்டும் வரும்
கனவுகளே எனக்கு போதும்!!!©

எத்தனை காதல் சொல்ல?



நெருக்கமாய் உன்கைகோர்த்து
நீண்ட தூரங்கள் நடந்து

வேர்வைபூத்த நெற்றியில்
மெதுவாய் முத்தமிட்டு

விரிந்தமார்பின் வெதுவெதுப்பில்
முகம் புதைத்து

ஏக்கம்நிறைந்த கண்களில்
எப்போதும் உன்னை நிரப்பிக்கொண்டு

உதடுகள் நான்கும்
முத்தப்போட்டி நடத்த

வெட்கம் மறைக்க
விரல்கள் பின்னியபடி

விலகுவதாய் நடித்து
மீண்டும் நெருக்கியனைக்க

எத்தனை இரவுகள்
பகலும்கூட போதவில்லை

இருந்தாலும் தீராக்காதல்!

வேதனை மிகுந்தபோது
உன்வார்தைகளுக்காய் ஏங்கி

விரல் பிடித்து உறங்கி
கதைகேட்டு உணவுண்டு

மறக்கவே முடியாத
காதல்சொன்ன கணத்தை

மீண்டும் மீண்டும் 
நினைவூட்டி கொண்டு 
இப்படி...

எத்தனையோ கவிதைகள்
உனக்காய் எழுதிவிடலாம்

நாம் வாழும் நாட்களே
அவற்றின் மௌனசாட்சியாய்!©

உன்விரல்கள்


மிக நீண்ட உன்விரல்களை 
பல காரணங்களுக்காய்  பிடிக்கும்
இருந்தாலும்
நம்சண்டைகளின் தொடர்ச்சியாய்  
நான் கோபம் கொண்டும்
அழுதும் சோர்ந்தும்
உணவை மறந்தவேளையில்
எதையும் யோசிக்காமல்
மௌனமாய் நீளும்
உணவூட்ட உன்விரல்கள்...©

சிரிப்பு



ஒரு நாளைக்கு
எத்தனை முறை சிரிக்கிறாய்?
கேள்வி ஒன்றை படித்தேன்...
யோசித்து பார்த்தபின்
மெல்லிய சிரிப்பு எட்டிப்பார்க்க 
ம், ஒன்று.. 
மனம் எண்ண துவங்க..  
எத்தனை பயங்கள்
இந்த சிரிப்புக்கு பின்னால்
நட்பு காதலாகி விடுமோ?
கடன் கேட்டு விடுவார்களோ?
பைத்தியம் என்பார்களா?
அர்த்தம்கெட்ட உணர்ச்சியா?

ஆள்மயக்கி என்று அவமதிப்பாகுமோ?
அவமானபட நேருமா?
யோசனை தொடர..
நின்று போனது எண்ணிக்கையும்
சிரிப்பும்... ©

ஐயோ! நீ பார்த்துவிட்டால்?



மிக நீண்ட பயணங்கள்
உன்நினைவுகளை மேலும்
நீடித்துக்கொண்டிருக்கும் வேளையில்


வேகமாய் பின்னோக்கி நகரும்
மரங்கள் எல்லாம்
நம் காதல் கணங்கள்
தொலைந்ததையே நினைவூட்ட    


திடீர் மழை போல்
கண்ணிமைகள் நனைத்து
வெளியேறும் நீர்த்துளிகளில்
மனதின் பாரம் குறைய...


மண்வாசம் போல்
உன்வாசம் என்மேலெங்கும்
நம் பெயர்கள் கிறுக்கிவைத்திருக்கும்
உள்ளங்கை மெல்ல குறுகுறுக்க..


சிறுநகை எட்டிபார்க்கிறது..
அழுகையுடன் நான் சிரிப்பதை
ஐயோ! நீ பார்த்துவிட்டால்?
கேலிசெய்து நீயுமல்லவா
சேர்ந்து சிரிப்பாய்...


நான்..
தொலைத்துவிட்ட சிரிப்பை
இப்போதாவது கொடுத்துவிடு..©

ஒரு ஓர பார்வை


எனக்காக உன்மனதில்
எதை மறைத்து வைத்திருக்கிறாய்?



ஒரு ஓர பார்வை
சொல்லாத காதல்

கொடுக்காத முத்தம்
செல்ல கோவம்

மெல்லிய சிணுங்கல்
இதயம் வரைந்த வாழ்த்துஅட்டை

தரமுடியாத பரிசுப்பொருள்
காதலிக்கிறேன் என்ற வார்த்தை

என்விரல் பிடிக்கும் ஆசை
கனவில் நான் வந்தது

எனக்கான ஒரு துளி கண்ணீர்...

ஏதாவது ஒன்றையாவது
சற்றே வெளிபடுத்திவிடு

மிகநீண்ட மௌனங்கள்
கொல்லாமல் கொல்லுதடி

என்னை மட்டுமல்ல...
நம் காதல் கணங்களையும்... ©

அட! ஆமாம்ங்க..




அவஸ்தைகளுக்கு பிள்ளையார்சுழி போட்டாயிற்று
ஆனால் அழகான அவஸ்தைகள்...

குறுந்தகவல்கள், அழைப்புகள் என்று
எந்நேரமும் கைபேசி சிணுங்க
அம்மா கேட்கிறாள் யாரென்று
அலுவலக தோழன் என்று
பொய் பேச பழகியாயிற்று
பொய் மட்டுமல்ல
பல பல பொய்கள்

உறங்குவதும் விழிப்பதும்
அனிச்சை செயலால் மட்டுமே..
சம்பந்தம் இல்லாத சண்டைகளுக்கெல்லாம்
பொறுப்பேற்க பழகி பழகி
"சமாதான படுத்துவது எப்படி?"
புத்தகம் கூட எழுத துவங்கிவிட்டேன்

உணவுண்ணும் குழந்தை போல
இரையும் பருக்கைகளும்
எதிரிலிருக்கும் தட்டும்கூட தெரியவில்லை
கோவிலுக்கு சென்றால்
அம்மனுக்கு 'பிங்க்' புடவை
அழகாயிருக்கும் என்று தோன்றுகிறது

கரடிபொம்மையை நானும்
கட்டிக்கொண்டு உறங்கமுயன்றபோது
அதிர்ச்சியானார்கள் அறைதோழர்கள்
யார் சிரித்தாலும், முறைத்தாலும்
ஏதோபோல் அவர்களை கடந்ததில்
விளங்கமுடியா கவிதையானேன்

ஆழ்ந்த ஆங்கிலபுலமையையும்
அகோனின் பாடல்களையும்
சாக்லேட்டின் சுவைகளையும் 
'காப்பி ஷாப்' பெயர்களையும்
இன்னும் பலதையும் 
ஏற்றி ஏற்றி
தாங்கமுடியாமல் திணறுது மூளை

'பெப்பெர்மின்ட்', 'டிக்டாக்'
எல்லாம் மென்று
'க்ளோஸ் அப்', 'கோல்கேட் பிளாக்ஸ்' 
என்று புன்னகை சிந்தி 
'ஜெல்' போட்டு, 'ஸ்பைக்ஸ்' வைத்து
'கார்னியர் மென்' தடவி
'ஆக்ஸ்' அடித்து
'வுட்லேண்ட்ஸ் ஷு' போட்டு 
'ரேமாண்ட்ஸ் மாடல்' மாதிரி போனால்  
பயபுள்ளைக கேக்கறானுங்க
'ஆன்சைட்  போகபோறியான்னு?'

அட! ஆமாம்ங்க..
தனுஷ் மட்டும் இல்ல
நானும் தான்
'காதலில் விழுந்தேன்!!!©

முதல் குற்றம்



மறக்க மனதால் முடியவில்லை
முதல் குற்றம்...
நீ செய்தாயா இல்லை?
முடிவில் நான் செய்தது குற்றமா!
புரியவில்லை...

என் இருப்பையும் இறப்பையும்
தினமும் சோதிக்கிறது உன் காதல்
காற்றில் ஈரம் குறைகிறது
ஆனால்
கண்களில் வற்றிபோகவில்லை

ஒன்றாக இருந்தோம்
இப்போது ஒன்றாக இருக்கிறேன்

எது இணைத்தது? எது பிரித்தது?
எப்போது சந்தித்தோம்?!
ம்ம்.. 
நினைவின் மகிழ்ச்சியை விட
ஏன் சந்திதொமென்ற 
எண்ணமே மேலோங்கி நிற்கிறது 

வலி இல்லாமல் காதல் இல்லை
ஆனால்...
வலி தாங்கும் நிலையில்
என் இதயம் இல்லை

புரிந்தாலும் புரியாதது போல் 
நீ போனாலும்
போகும் வழியில்
ஏதேனும் இருக்கும்

என் கண்ணீரையும் காதலையும்
உனக்கு நினைவு படுத்திகொண்டு...©

இப்போதாவது சொல்!



அரை பார்வை
சிறு புன்னகை
விரல் நுனியின் தீண்டல்
ஒரே ஒரு இதழ் முத்தம்

ஒரு அடி தூரத்தில் நீ
அவசரமான இரண்டு நிமிட பேச்சு
சாப்பிட்டியா என்ற ஒரு வரி விசாரிப்பு
உன் நினைவில் உறக்கம்

கைகோர்த்து கனவில் ஒரு நடை
ஒரு வரி கவிதை
உன்னையே நினைத்து கொண்டு இருக்கிறேன்
என்ற சின்ன பொய் 
உயிர் உருகுதடா...

என்றாவது ஏதாவது நடக்கும்
என்ற ஏக்கத்தில்   
பால்குடி மறக்கவைக்கப்படும்
குழந்தை போல ஏங்கி ஏங்கி
உன்னையே.. 
நினைத்து நினைத்து அழும் என்னை
எப்படி சமாதான படுத்த போகிறாய்?!
இப்போதாவது சொல்!  ©

எனக்கு தெரியாது!



எனக்கு தெரியாது!
ம்ம்.. பார்க்கலாம்... 
வேறு என்ன?!
என்னிடம் எந்த முடிவும் இல்லை... 
நான் யோசிக்கவில்லை..
நீயாக கற்பனை கொள்ளாதே..
நான் அப்படி சொல்லவே இல்லை..
உனக்கு தோணுவதை செய்!
சரி..
அப்படியா?
நான் யார் உனக்கு?! 
----------------- (கோபம் தாங்கிய மௌனங்கள்)


உன்னால் எனக்கு வலிக்கும் நேரங்களை
எப்போது உணரபோகிறாய்?!©

இல்லை...



பேசும் வார்த்தைகள் தடைபடும் போது
வேறு என்ன..  என்ன என்று
கேட்டு கொண்டே இருக்கிறாய் 

அப்போது என்ன சொல்லட்டும்?
உன் பெயரை சொல்லவா?
கொடுக்கப்படாத முத்தக்கணக்கை சொல்லவா?

காதலின் கனவுகளை சொல்லவா?
தினம் இரவில்
உன் நினைவில் அணைக்கும்
தலையணை பற்றி சொல்லவா?

இல்லை...

பிரிவில் இப்போதும்
நனைந்து கொண்டு இருக்கும்
கண்ணிமைகளை பற்றி சொல்லவா? ©

காதலில் எழுதுகிறேன்..



ஏங்கி ஏங்கி சேரும் இதயங்கள்
காத்திருந்து சேரும் உதடுகள்
காணாமல் போகும் கோபங்கள்
காதலில் எல்லாமே சுகம்தான் 

சிரிப்பதற்கு யாரோ சொல்லும் 
ஏதாவது ஒரு வார்த்தை போதும்
சந்தோஷ பட வைக்க
நீ... நீ மட்டுமே வேண்டும்!

கண்ணீரின் கரைகளை துடைக்க
உன் உதடுகள் போதும்
உன்கைகளின் இறுக்கத்தில்
நானிருக்கையில் எதுவும் பயமில்லை

உன்னை பிரிகையில் மட்டுமே 
அத்தனை ஏக்கங்கள் ஏமாற்றங்கள்
வேதனைகள் பயங்கள்
துடிப்புகள் எல்லாமுமே... 
என் கைகளை விட்டு பிரிந்தாலும்
நினைக்க மறந்து விடாதே
உனக்கான என் வார்த்தைகளை
மையில் நனைத்து எழுதவில்லை

கண்ணீரில் நனைத்து
காதலில் எழுதுகிறேன்.. ©

அவள் கண்ணில்..



ஏதோ ஒரு நொடியில்
கொட்டி தீர்த்து விடும் வேகத்துடன்
அவள் கண்ணில் நிற்கிறது 
கண்ணீரும்..
எனக்கான அவளது காதலும்... ©
 

எங்கோ இருக்கும் நிலவு பார்த்து



பூக்கள் பூத்து உதிரும் காலங்கள் 
அவளின் பிரிவை உணர்த்த 
மழை ஓய்ந்து 
வெளிர்ந்திருக்கும் வானம் 
அவள் முகம் போலவே இருக்கிறது
பனியில் நனைந்த உடல் 
என்றோ அவள் கைபிடித்த 
அந்த ஜில்லென்ற வாசத்தை தூவிபோக 
எங்கோ இருக்கும் நிலவு பார்த்து 
சிரிக்கும் குழந்தையாய் 
அவளை நினைத்து சிரித்து கொள்கிறேன்...©

உன் கண் தீண்டலை கூட



உன் கண் தீண்டலை கூட 
இழந்துவிடுவேனோ?
இழத்தலில் இருப்பை தேடுகிறேன்
இருக்கும்போது இழந்துகொண்டிருந்தேனா?
காதலில் காதல் வளர்த்தேன்
இனி கண்ணீரிலா வளர்ப்பேன்?


மெல்ல மெல்ல பூத்தது
மீண்டும் மீண்டும் பூக்காது..
அழுதுகொண்டே காதலை சொன்னேன்
சிரித்துகொண்டே பிரிவை சந்திக்கிறேன்
எந்த வலி அதிகம் என்பேன்?


ரகசியமான இதழ்தீண்டல்களை 
ரகசியமாகவே நினைத்துகொள்வதா?
மீண்டும் அந்த ரகசியங்கள்
எப்போது நிகழும்?


காத்திருத்தலில் காதலா?
இல்லை காதலினால் காத்திருத்தலா?
வாய்மொழியின் ஒலிவடிவத்தில்
அது மட்டுமா நீ?
மௌனத்தின் சான்றாய் நிற்கிறேன்


எனக்காக நீ இருக்கிறாய் 
என்றாலும், நெஞ்சத்தின் வலி
கொல்லாமல் கொல்லுகிறதே..
என்ன சொல்லி தேற்றிக்கொள்ள 
நீ இருந்தும்
என்னருகில் இல்லை என்பதை... ©

Related Posts Plugin for WordPress, Blogger...