நான் ஒரு தேவதையையும்
அவள் ஒரு தெய்வத்தையும்
திருமணம் செய்துக்கொண்டதாய்
மகிழ்ந்திருந்த வேளையிலே
திடீரென்று கேட்டாள்..
நாம் ஒரு நாய்க்குட்டி வளர்த்தால் என்ன?!
புது மனைவி கேட்டால்
புலிக்குட்டியே வளர்க்கலாம்
ஒரு நாய்க்குட்டி தானே!..
அடுத்தநாளே வாங்கிவந்தோம்..
அன்று இரவே
அவளுக்கும் எனக்கும் நடுவில்
அது உறங்கியது
அவளும் உறங்கினாள்
நான் மட்டும் உறங்கவில்லை!
பராமரிப்பு வேலைகளை
பாகுபாடின்றி பகிர்ந்துக்கொண்டோம்
காலைக்கடமைகள், குளியல்,
உணவுவூட்டல், உடல்நிலை கவனிப்பு,
இப்படி...
தீவிர கவனிப்பு வேலைகள் எனக்கும்
விளையாடுதல், நடைப்பயிற்சி,
கொஞ்சுதல், கூடவே வைத்திருத்தல்
போன்ற
தீராத கவனிப்பு வேலைகள் அவளுக்கும்
நடுநடுவே என்னை அவள்
கவனிக்க முற்படுகையில்
பாய்ந்து வந்து நிற்கும்
என்னை கண்காணித்தபடி
அவளை கண்ணடித்தபடி
இதில்..
பலநேரம் அது கதாநாயகனாகவும்
நான் வில்லனாகவும் மாறியதில்
அவளுக்கு அளவுகடந்த பெருமை
எனக்கு அடக்கமுடியாத ஆத்திரம்
அதை யாருக்காவது கொடுத்துவிடலாம்
என்று பேசமுற்படுகையில்
குமுறி விட்டாள்
நம் குழந்தையாய்
அது இருந்திருந்தால்
இப்படி யோசிப்போமா என்று
இரண்டு மாத குழந்தையை கூட
மாமியாரை வளர்க்கச் சொல்லலாம்
இதை வளர்க்க சம்மதிப்பார்களா?!
பள்ளியிலே சேர்க்கவும் வாய்ப்புகளில்லை
பாவம் புண்ணியம் மறந்து
நான் பாவம் என்கிற நிலையிலே
ஓர் முடிவெடுத்தேன்
பிறந்தநாள் பரிசென (!!!)
நண்பருக்கு கொடுப்பதென
மிக நீண்டசண்டைக்கும்
மிக நீண்டசண்டைக்கும்
மிக நீண்டசமாதானத்திற்கும்
முடிவில்..
அவள் அழுகையுடன் சம்மதிக்க..
ஆனந்த அழுகையுடன்
அவளை நான் கைப்பிடிக்க..
அப்பாடா!
நண்பர்களே!
உங்களில் யாருக்கு பிறந்தநாள்
இந்த வாரம்?!!!
ஹா .. ஹா .. கலக்கல் கவிதை .. எனக்கு பிறந்த நாள் இல்லை இருந்தாலும் உங்க கஷ்டத்தை பார்த்தா பாவமா இருக்கு நான் வாங்கி கொள்ளவா ?
ReplyDelete//பலநேரம் அது கதாநாயகனாகவும்
ReplyDeleteநான் வில்லனாகவும் மாறியதில்
அவளுக்கு அளவுகடந்த பெருமை
எனக்கு அடக்கமுடியாத ஆத்திரம்//
பாவம் அந்த மனிதர்.
“நாயைக்கொண்டு வந்து நடுவீட்டில் வைத்தால்..... என்று ஒரு பழமொழி சொல்லுவார்கள்.
இவர்கள் நடுவீட்டில் வைக்காமல் இருவர் படுக்கைகளுக்கும் நடுவில் அல்லவா வைத்து விட்டார்கள். கஷ்டம் கஷ்டம் .. மஹாகஷ்டம்.
சீக்கரமாக யாருக்காவது பரிசளித்து விடுங்கள். அது தான் நல்லது.
அழகான படைப்பு. பாராட்டுக்கள். vgk
பரிசுகள் ஜாக்கிரதை என்று சொல்லிவிட்டு மிக அருமையான கவிதையை தந்துள்ளிர்கள். வாழ்த்துக்கள். எனது குழந்தை நாய்குட்டி வேண்டும் என்று என்னை தினமும் நட்சரித்து கொண்டிருக்கிறாள். இந்த பதிவை காண்பித்தாள் எனக்குதான் பிரச்சனை.
ReplyDeleteஒரு சிறிய அட்வைஸ் இந்த பதிவுக்கு நீங்கள் இட்ட படங்கள் மிக அதிகம் அதை குறைத்து இட்டால் மிக நன்றாக இருக்கும் என்பது எனது கருத்து.