படிக்க தெரியுமா பத்திரிக்கைகளை?
வடிக்க தெரியும் சாதத்தை
மேடைகளில் பேசியதுண்டா?
கடவுள் முன் பாடியதுண்டு
நண்பர்கள் தோழிகள் என்று...?
அம்மாவும் தங்கையும் மட்டுமே
பெண் விடுதலை பற்றி?
பெரிய கருத்து எதுவுமில்லை
அரசியல் பற்றிய அலசல்கள்..?
துணி அலச தெரியும்
கிரிக்கெட் பார்ப்பதுண்டா?
எப்போதும் இல்லை
வலைதளத்தில் பதிவுகள் என்று?
நேரமிருந்தது இல்லை
கவிதைகள் கட்டுரைகள்..?
கோலம் போடுவேன் நன்றாய்
பங்கு சந்தையில் ஈடுபாடு?
தபால் அலுவலகம் தாண்டியதில்லை
கிரெடிட் கார்டு?
வரவுக்குள் செலவு செய்வேன்
ஆங்கில படங்கள் பார்த்ததுண்டா?
தமிழில் சில படங்கள் பார்த்ததுண்டு
பந்தயங்கள் கட்டியதுண்டா?
பார்த்தது கூட இல்லை
பார்ட்டி டான்ஸ் என்று..?
நான்காம் வகுப்பில் பரதநாட்டியம்..
கைபேசி..?
அவரசத்திற்கு மட்டுமே..
அலுவலகத்தின் வருமானம்?
அம்மாவிடம் கொடுத்துவிடுவேன்
வேறு விருப்பங்கள்?
தோட்டம், தியானம், எளியவருக்குதவி
கோவம் வருமா?
அடிக்கடி கிடையாது
உன் அம்மா, அப்பா..?
தெய்வங்கள்..
என் அம்மா, அப்பா பற்றி?
தெய்வத்தினும் மேலான தெய்வங்கள்
என்னை பற்றி உன் கருத்து?
.......................... (மௌனம்)
என்னுடைய விருப்பங்கள் ஏதுமில்லை உன்னிடம்
சரி... பரவாயில்லை
உனக்கு ஏதாவது கேட்க வேண்டுமா?
எனக்கு தெரிந்தது ஏதாவது உங்களுக்கு..?
.......................... (தெரியாது என்ற மௌனம்)
இனிதே முடிந்தது
பெண் பார்க்கும் படலம்
பையனிடம் அம்மா பதில் கேட்க
"பிடிச்சிருக்கு.. பொறுப்பான பொண்ணு"
பெண்ணிடம் அம்மா கேட்க..
"பொறுப்பில்லா பையன், பிடிக்கல"