நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க..

24 May 2011

பொறுப்பில்லா பையன், பிடிக்கல..




படிக்க தெரியுமா பத்திரிக்கைகளை?
வடிக்க தெரியும் சாதத்தை 
மேடைகளில் பேசியதுண்டா?
கடவுள் முன் பாடியதுண்டு
நண்பர்கள் தோழிகள் என்று...?
அம்மாவும் தங்கையும் மட்டுமே 

பெண் விடுதலை பற்றி?
பெரிய கருத்து எதுவுமில்லை
அரசியல் பற்றிய அலசல்கள்..?
துணி அலச தெரியும் 
கிரிக்கெட் பார்ப்பதுண்டா?
எப்போதும் இல்லை

வலைதளத்தில் பதிவுகள் என்று?
நேரமிருந்தது இல்லை 
கவிதைகள் கட்டுரைகள்..?
கோலம் போடுவேன் நன்றாய்
பங்கு சந்தையில் ஈடுபாடு?
தபால் அலுவலகம் தாண்டியதில்லை 
கிரெடிட் கார்டு?
வரவுக்குள் செலவு செய்வேன்


ஆங்கில படங்கள் பார்த்ததுண்டா?
தமிழில் சில படங்கள் பார்த்ததுண்டு 
பந்தயங்கள் கட்டியதுண்டா?
பார்த்தது கூட இல்லை
பார்ட்டி டான்ஸ் என்று..?
நான்காம் வகுப்பில் பரதநாட்டியம்..
கைபேசி..?
அவரசத்திற்கு மட்டுமே.. 

அலுவலகத்தின் வருமானம்?
அம்மாவிடம் கொடுத்துவிடுவேன் 
வேறு விருப்பங்கள்?
தோட்டம், தியானம், எளியவருக்குதவி  
கோவம் வருமா?
அடிக்கடி கிடையாது
உன் அம்மா, அப்பா..?
தெய்வங்கள்..
என் அம்மா, அப்பா பற்றி?
தெய்வத்தினும் மேலான தெய்வங்கள்

என்னை பற்றி உன் கருத்து?
.......................... (மௌனம்) 
என்னுடைய விருப்பங்கள் ஏதுமில்லை உன்னிடம் 
சரி... பரவாயில்லை 
உனக்கு ஏதாவது கேட்க வேண்டுமா?
எனக்கு தெரிந்தது ஏதாவது உங்களுக்கு..?
.......................... (தெரியாது என்ற மௌனம்)

இனிதே முடிந்தது
பெண் பார்க்கும் படலம்
பையனிடம் அம்மா பதில் கேட்க
"பிடிச்சிருக்கு.. பொறுப்பான பொண்ணு"
பெண்ணிடம் அம்மா கேட்க..
"பொறுப்பில்லா பையன், பிடிக்கல" 

23 May 2011

காணமல் போன அன்று அவன்..


நேற்றுமுதல் காணவில்லை 
சிறு சண்டையினால் தொலைந்துவிட்டான் 

தொலைந்த அவனால்
உறக்கம் தொலைக்கிறேன்
உணவு மறக்கிறேன்
கனவுகளும் வரவில்லை
கவிதைகளும் எழுதவில்லை
தொடுத்த பூக்களாய் 
தொடருது அவன் நினைவுகளே

கண்டுபிடிப்போருக்கு பரிசு உண்டு
ஆனால்..
கேட்டுவிடாதீர்கள் பரிசாய் அவனையே 

அங்க அடையாளங்கள் சொல்கிறேன்
அழகானவன் அவன் 
காணமல் போனது 
நீல நிற சட்டையிலே 

குழந்தை தலைமுடி 
கொஞ்சம் மட்டுமே தலையில் 
அப்பளபூ நெற்றியை 
அடிக்கடி சுருக்குவான்
சிறுபருப்பு கண்கள்
குறுகுறுவென பார்க்கும் 

மிளகாய்பழ மூக்கு
மேலும் சிவக்கும் கோவத்திலே 
அரிந்த மாங்காய் போல் மீசையோ 
குத்தும் முத்தம் குடுக்கையிலே  
கால் படி கழுத்து
திரும்பும் பெண்களை பார்த்ததுமே  

புல் முளைத்த மார்பு
கரடிபொம்மை போலிருக்கும்
கைகால் முளைத்த 
நீண்ட மரம் போல 
நெடுநெடுவென இருப்பான்
வாத்து மிதப்பது நீரில்
இவன் நடப்பது நிலத்தில் 

இன்னும் சொல்லலாம்தான்
ம்ம்..
நீங்களுமே அவனை விரும்பிவிட்டால்?!

அவன்.. 
கணக்கிலே புலி
கவிதையிலே வாலி
எங்கேனும் மறைந்திருந்து
எழுதக்கூடும் ஒரு கவிதை
என்னை திட்டியாவது

தொலைவது போல் நடித்து 
தூரத்தில் ரசித்திருப்பான்
ன்னுடைய தவிப்புகளை..
பொல்லாத காதல்
'போடா' என்று சொல்லிவிடலாம்
ஆனால்..
விளையாட்டு இன்னும் முடியவில்லையே 


Related Posts Plugin for WordPress, Blogger...