நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க..

07 June 2011

இலை மறைக்கும் பூக்கள்

*****************************************************

கைப்பிடியில் இருந்து
திமிரும் குழந்தையாய்
என்னுடைய காதலும்
அவளுடைய மறுதலிப்பும்
*****************************************************

குறுஞ்சிரிப்புடன் மறுத்திருக்கலாம்
அவள் மீதான என் காதலை
குமுறி அழுது மறைக்கிறாள்
என் மீதான அவளின் காதலை
***************************************************** 

காணாமல் போனவர்கள் பட்டியலில்
என் இதயமும் இப்பொழுது
தொலைந்த இடமும் 
தொலைக்கப்பட்ட விதமும்
ஏன்.. 
தற்போதைய அதன் இருப்பிடமும் 
அவளறிவாள் நன்றாகவே
இருந்தும் மறுதலிக்கிறாள்
அப்பாவி குற்றவாளியாய்
*****************************************************

நீண்ட நகங்களுக்கு 
நக சாயம் பூசுவது போல
நான்.. 
நீட்டிய ஒற்றை ரோஜாவுக்கு 
நட்பு சாயம் பூசுகிறாள்
*****************************************************

உணவருந்த பிடிக்கா
ஒரு முழுநிலவு இரவில் 
தின்றுகொண்டிருக்கிறது என்னை
அவளின் நினைவுகள்.. 
*****************************************************

நான் வேண்டுவது 
கூடை பூக்கள் இல்லை
அவள் சூடியிருக்கும்
ஒற்றை ரோஜாவை.. 
*****************************************************

நானறிந்த ரகசியம்
அவளின் காதல்
நானறியா ரகசியம்
அவள்..
*****************************************************

30 May 2011

அவள் அழுகையில்

அவள் அழகு
அவள் அழுகையில் 
அழகோ அழகு.. 

அவள்.. 
அழுவதையே விரும்புகிறேன்
சிரிப்பதை விட
அப்போது தானே
மூக்கை துடைப்பாள் 
என் சட்டை பிடித்திழுத்து 

அவள் அழுகையில்
சற்றே நனையும் 
காதோர தலைமுடி   
மயிலிறகு...
மழையில் நனைவதை போல

அழுகையிலும் 
அழகாய் அழ 
எப்படி முடிகிறது
அவளால் மட்டும்?!

அழுதுகொண்டே..
அதற்காய் வெட்கம் கொண்டு
சற்றே சிரிக்க முயன்று
பின் தோற்று 
மெல்ல விசும்புகையில்
ஒரு மிட்டாயை நீட்ட தோன்றுகிறது
அவளின் முன்னே 

சிவந்திருக்கும் கண்களும்
படர்ந்திருக்கும் கண்ணீரும்
பனியின் நடுவே ரோஜாக்களாய்  

திடீர் மழை போலவே
அவளது கண்ணீரும்
அழுது முடிந்த பின்னும்
இமைகளில் ஈரம்  
இலைகளின் நீராய்
Related Posts Plugin for WordPress, Blogger...