எனை கொல்லும் பல நேரங்கள்
நான் வெல்லும் சில நேரங்கள்
திறமை காட்டி எடுக்கப்படும்
பிச்சையென மாத சம்பளம்
ஏறுவதிலுள்ள சிரமம்
இறங்குவதில் இல்லை
வனம் தொலைத்த தேவதையாய்
எனை நானே தொலைக்கிறேன்
உறக்கத்திற்கு ஏங்கும் விழிகள்
ஆடைகளுடன் ஐக்கியமாகிவிட்ட கைகள்
மரத்துப்போன சதையாய் இதயம்
மூடியே இருக்கும் மூளையின் மடிப்புகள்
பயணங்களில் புத்தகங்கள்
ஆனால், மனிதர்களை மட்டுமே படித்தபடி
எதிர்ப்படும் மனித முகங்கள்
நானே தானா?
வெப்பத்துடனும் மழையுடனும்
நீளும் என் தீண்டுதல்கள்
உடையும் நீர்குமிழிகளாய்
என் கண்களிலே
நிறுத்த முடியாத
நீண்ட ஒரு பயணமாய் கற்பனைகள்
பெண்மைக்கான நாட்களிலும்
எதை மாற்றவும் நேரமின்றி
ஓடவும் நிற்கவும்
அதுவே இயலாத கடிகாரமென
வாழ்க்கை அமைந்த பின்
ஒரே கையென
யானை சுமக்கும் தும்பிக்கையாய்
நானும் சுமக்கிறேன் நம்பிக்கையை