நெடுநாட்களாய் உன்னை காணவில்லை
நீ வருகின்ற தேதியும் தெரியவில்லை
பெரியதாய் நான் எதையும் சேர்க்கவில்லை
பேதைமை நிறைந்த என் அன்பை தவிர
வீட்டு வாசலில்
ஏறி இறங்க படிக்கட்டுகளும்
அதன் நடுவில்
நீ விளையாட
ஒரு சறுக்குமரமும்
கட்டி முடித்தது
காலப்போக்கில் உடைந்துவிட்டது
என்மனதை போலவே
நம் வீட்டுத்தோட்டத்தில்
நட்ட செடிகள்
மரங்களாகி விட்டன
தேவையில்லாத உறவுகளாய்
இலைகள் கூட உதிர்ந்துவிட்டன
உன் வரவிற்கான
அவகாசங்களும் குறைந்துவிட்டன
மிக குறுகிய
என் மடியில்
இப்போதும் இருக்கிறது
உனக்கோர் இடம்
மிக வளர்ந்த
உன் மனதில்
எனக்கோர் இடம்
இப்போதாவது இருக்கிறதா?!
உன்னை பற்றி
எனக்கு பல கனவுகள்
உன்னை பற்றி
உனக்கும் பலபல கனவுகள்
உன் கனவுகள் கைகூட
விற்றுவிட்டேன் நான்
என் கனவுகளையும்
உறக்கத்தையும்!
என் உடல்நலம் குறித்து
என்றோ ஒருநாள் விசாரிக்கிறாய்..
வறுமையும் வயோதிகமும்
தனிமையும் தள்ளாமையும்
தனித்தனியே வாட்டினாலும்
நலம், நலமறிய அவா!
என்றே சொல்லி
நலிந்து போகிறேன்
உன்னை வற்புறுத்தும் எண்ணம்
எப்போதும் எனக்கு இருந்ததில்லை
மிக மெல்லிய குரலில்
உன்னிடம் இறைஞ்சுகிறேன்
ஒரே ஒரு முறை
உன்னை பார்த்துவிடவே துடிக்கிறேன்
உயிர்போகும் பயத்தில் இல்லை..
பார்வை குறையும் பரிதவிப்பில்!
குறிப்பு: இன்றைக்கு காலையில் தினமலர் பத்திரிக்கையை படித்துக்கொண்டிருந்தேன். அப்போது படிக்க நேர்ந்தது கேரளாவில் வயதான ஒரு தம்பதியர் குளியலறையில் மூன்று தினங்கள் மாட்டிக்கொண்டதை. கணவருக்கு உடல்நிலை சரியில்லாமல் வாந்தி எடுத்துகொண்டிருக்க, உதவி செய்ய மனைவி முயலுகையில் கதவு திடீரென்று மூடிக்கொள்ள, கதவை திறக்க இயலாமல், தண்ணீரை மட்டும் குடித்தபடி இருந்திருக்கின்றனர். பிறகு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மருத்துவமனையில் சேர்த்து உதவி செய்து இருக்கின்றார்கள். ஆனால் இது பற்றி அந்த வயதான தம்பதியர், தங்கள் இரு பிள்ளைகளுக்கு தெரிவிக்க கூட விருப்பமின்றி இருந்திருக்கிறார்கள். மிக வேதனையாக இருந்தது! இளமையில் வறுமையும், முதுமையில் தனிமையும், கொடுமையிலும் கொடுமை! இன்றைய பதிவு அதை ஒட்டி எழுதி இருக்கிறேன்!