
"அம்மா! அம்மா!"
"என்னடா செல்லம்?"
"அம்மா.. பக்கத்து வீட்டுல ஆறாவது படிக்கற பாபுவா நான் காதலிக்கிறேன்மா.."
அம்மா சிரிக்கிறாள். "அம்முக்குட்டி! நீ சின்ன பொண்ணு.. பாபு உன்னைய விட எவ்ளோ பெரிய பையன்.. அவன் உனக்கு அண்ணன்டா. இப்படியெல்லாம் பேசக்கூடாது.. சமர்த்து பொண்ணு இல்ல நீ.. ஓடு ஓடு..போய் வீடியோகேம்ஸ் விளையாடு.."
"அம்மா.. நான் நிஜமா அவன காதலிக்கிறேன்மா"
"உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாது? பைத்தியம் மாதிரி உளறாம போய் விளையாடு.. அப்பாவுக்கு நீ இப்படி பேசறது தெரிஞ்சா அடிதான் விழும், புரியுதா? பேசாம போ, போய் விளையாடு!"
அம்மாவிடம் கோவம் எட்டி பார்க்க..
"ஏம்மா! . அவனை நான் காதலிச்சா என்ன தப்பு? அம்முகுட்டி கேட்க..
"அவன் உன்னயவிட பெரிய பையன், நீ இப்படி எல்லாம் பேசக்கூடாது.."
"அப்பா கூட தான் உன்னைய விட பெரியவரு.. நீ அவர காதலிச்சி கல்யாணம் பண்ணிக்கல? அப்போ நான் ஏன் பண்ணிக்க கூடாது?!"
"என்னாங்க.. உங்க பொண்ணு பேசற பேச்ச பார்த்தீங்களா?!"
ஒன்னாம் வகுப்பு தமிழ்பாடப்புத்தகத்துல வரமாதிரி அம்மா சமையல்ரூம்ல இருந்து அலற,
அப்பா நியூஸ்பேப்பர் படிக்கறத நிறுத்திட்டு, ஈசிசேர்ல இருந்து எட்டி பாக்கறாரு..
அப்பா அமைதியா என்னை பார்த்து "செல்லம்! இங்க வாடா..!"
"என்னப்பா?" அம்மாவும் நானும் கிட்டே போக..
அம்மாவை பார்த்து "என்னடி நீ.. குழந்தைகிட்ட புரியறமாதிரி எடுத்து சொல்லணும்.. அவ குழந்தை, நல்லது கெட்டது எதுன்னு நாம தான் புரியவைக்கணும்", "இப்படி வா.." அப்பா என்னை மடியில் தூக்கி வைத்துக்கொண்டு ஆரம்பித்தார்..
"நீ குட்டிபொண்ணு..இப்போ வர நிறைய சினிமா எல்லாம் பார்த்து தப்பு தப்பா யோசிச்சி வைச்சி இருக்க.. சினிமால வர குட்டி பசங்க காதல் எல்லாம் நிஜம் இல்லடா.. நீ புத்திசாலி, அப்பாவுக்கு தெரியும்!!!.. அதுக்கும் மேல, அவன் உன்னைய விட பெரிய பையன்.. உனக்கு அவன் அண்ணன்.. புரிஞ்சுதா? உனக்கு அவன் யாரு.. அண்ணன்.. அண்ணன்.. எங்க. சொல்லு பாக்கலாம்.. பாபு அண்ணா, பாபு அண்ணா.."
விக்கி விக்கி அழுதுகொண்டே நான் "பாபு அண்ணா" என்று சொன்னதும், அப்பா "வெரி குட்" என்று மலர்ச்சியுடன் பாராட்ட.. அம்மாவும் மகிழ்ந்து போகிறாள்.. என்னோட முதல் காதல் முடிந்து போனது.. நாலுவரி நோட்டுல இதை பத்தி ஒரு கவிதையாவது எழுதணும். என் சோகம் என்னோட..!